வெள்ளைக் கொடி ஏந்திய பாகிஸ்தான் ராணுவம்!

எல்லையில் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வெள்ளைக் கொடியேந்தி வந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஹஜிபூர் நிலைகளில் இருந்து அந்நாட்டு ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. 10 மற்றும் 11ஆம் தேதி நடைபெற்ற இந்த அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

பதிலடியில், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த இரு வீரர்களின் சடலங்களையும் துப்பாக்கிச் சண்டைக்கிடையே மீட்க பாகிஸ்தான் ராணுவம் முயற்சி மேற்கொண்டது.

ஆனால், தோட்டாக்களும், சிறிய ரக பீரங்கி குண்டுகளும் சீறிக் கொண்டிருந்த காரணத்தால் அச்சம் அடைந்த பாகிஸ்தான் வீரர்கள், உயிரிழந்த வீரர்களின் சடலங்களை மீட்க தயக்கம் காட்டினர். இரு முறை முயற்சி மேற்கொண்ட பின்னர் அவர்கள் பின் வாங்கினர்.

இதை அடுத்து நேற்று வெள்ளைக் கொடியேந்தி வந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தங்கள் வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்றனர். இந்த வீடியோ காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

சண்டை நிறுத்தம் மற்றும் சமாதானத்தைக் குறிக்கும் வகையில் வெள்ளைக் கொடியேந்தி வந்ததால், பாகிஸ்தான் நாட்டு வீரர்களின் உயிர் தியாகத்திற்கு தாங்கள் மதிப்பு அளித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட வீரர்கள், பாகிஸ்தானின் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால், அந்த வீரர்களின் சடலங்களை மீட்க, அந்நாட்டு ராணுவம் முயன்றதாகக் கூறப்படுகிறது.

அதுவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிகளோ அல்லது, கில்ஜிட் – பலுசிஸ்தானைச் சேர்ந்த Northern Light Infantry படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலோ அவர்களுக்கு இவ்வளவு மதிப்பு கொடுப்பதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு.

கெரான் பகுதியில் ஜூலை 30 மற்றும் 31ஆம் தேதிகளில் நடந்த சண்டையின் போது இந்திய ராணுவத்தின் பதிலடிக்கு உயிரிழந்தோர், பாகிஸ்தான் ராணுவத்தின் குறிப்பிட்ட படைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது தீவிரவாதிகளாகவோ தான் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே அவர்களது உடல்களை பாகிஸ்தான் ராணுவம் மீட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

-athirvu.in

TAGS: