இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு!

திருவண்ணாமலை: மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக திமுக போராட்டத்தை நாளை அறிவிக்க இருக்கிறது. அப்போராட்டத்தில் அனைத்து தமிழர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: கருணாநிதி பிறந்த நாளான ஜூன்3-ந் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும். அந்த நாளில் திராவிடர் இயக்கப் படைப்பாளிகளுக்கு விருதும் வழங்கப்படும்.

தேகங்களை தீக்கிரையாக்கியவர்கள்

திமுக பல வெற்றி தோல்விகளைப் பார்த்த இயக்கம். திமுகவைப் போல் வெற்றிகளையும் திமுகவைப் போல் தோல்விகளையும் எதிர்கொண்ட கட்சி வேறு எதுவும் இல்லை. தாய்மொழிகாக்க 1965-ல் துப்பாக்கிக் குண்டுகளை நேருக்கு நேர் பார்த்த இயக்கம் திமுக. மொழி காக்க தேக்குமர தேகங்களை தீக்கிரையாக்கியவர்கள் திமுகவினர். இத்தகைய தியாகங்களால்தான் திமுகவுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பை மக்கள் கொடுத்தனர்.

முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை

திமுக அரசின் சாதனை சரித்திரத்தைப் போல் எந்த கட்சிக்காவது உண்டா? தமிழகத்தில் நடைபெறுவது பாஜகவின் பினாமி ஆட்சி, வெளிநாடு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவில்லையே ஏன்? தமிழகத்தில் முதலீடு செய்ய இருக்கும் நிறுவனங்களின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை? தமிழகத்தில் ஏற்கனவே முதலீடுகளை தொடங்கியதாக சொல்லப்படும் 220 நிறுவனங்கள் பட்டியலை வெளியிட தயாரா?

மத்திய அரசு முட்டுக் கொடுப்பு

மத்திய அரசு மட்டும் முட்டுக்கொடுக்காமல் இருந்தால் அதிமுக அரசு நீடித்திருக்குமா? மத்திய அரசின் 100 நாட்களில் பொருளாதாரத்தை 5% ஆக குறைத்ததுதான் மிகப் பெரும் சாதனை. மத்திய அரசின் கலாசார படையெடுப்பை தடுக்க வேண்டிய மாபெரும் இயக்கம் திமுக.

அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு

அமித்ஷாவுக்கும் மோடிக்கும் தாய்மொழி இந்தியே அல்ல…. பிறகு ஏன் இந்தி மொழிக்கு வக்காலத்து? 2 நாட்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது, இந்தி பேசாத மக்களுக்கு தேள்கொட்டியது போன்ற செய்தி.

தமிழ் படிக்கவும் தடை வரும்

இந்தியாவில் மொத்தம் 1652 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் ஒரே நாடு ஒரே மொழி என இந்திக்கு மட்டும் மகுடம் சூட்டுவது என்பது இந்தி திணிப்புதான். இன்று இந்தி திணிக்க சட்டம் கொண்டுவருவார்கள்- நாளை தமிழைப் படிக்கவும் தடை சட்டம் கொண்டுவந்தாலும் வருவார்கள்.

நாளை போராட்ட அறிவிப்பு

அதனால்தான் இந்தி திணிப்பை தந்தை பெரியார் கலாசார படையெடுப்பு என்றார். அத்தகைய கலாசார படையெடுப்பை எதிர்க்கும் போராட்டத்துக்கு திமுக தயாராக இருக்கும். சென்னையில் நாளை திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் ஆலோசித்து அறிவிப்பை வெளியிட இருக்கிறோம்.

மீண்டும் 1938 மொழிப்போர்

இந்தியை திணிக்கும் எந்த முயற்சியை நாங்கள் பார்த்து கொண்டிருக்கமாட்டோம், இந்தியை திணிக்கும் முயற்சியை தடுக்க எந்த ஒரு தியாகத்துக்கும் திமுக தயாராக இருக்கிறது, இந்தி- இந்தியா இதில் இந்தியாதான் எங்களுக்கு வேண்டும்- இந்தி தேவை இல்லை என்கிறோம். இந்தி திணிப்பு என்பது ஒரு கலாசார படையெடுப்பு. திமுக நடத்தப் போகும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் அத்தனை தமிழர்களும் பங்கேற்க வேண்டும். அன்று 1938-ல் தொடங்கிய மொழிப்போரை 2019-லும் நடத்துகிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

tamil.oneindia.com

TAGS: