காஷ்மீரின் சர்ச்சைக்குரிய மரணங்கள் – என்ன நடக்கிறது அங்கே?

ஆறு வாரங்களுக்கு முன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள எண்ணற்ற உயிரிழப்புகள் குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் பல முரண்பட்ட தகவல்கள் உள்ளன இந்த சூழலில் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயி ஸ்ரீநகரில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகப் பார்வையிட்டார்.

காஷ்மீர்: சர்ச்சைக்குரிய மரணங்கள் - என்ன நடக்கிறது அந்நிலத்தில்? #GroundReport

இந்திய துணை ராணுவப் படை சுட்டது

ஆகஸ்டு 6ஆம் தேதி 17 வயதான அஸ்ரர் கானுக்கு, நான்கு வாரங்களில் தனது உயிரைப் பறித்துக் கொண்ட காயம் ஏற்பட்டபோது அவர், தனது வீட்டுக்கு வெளியே தெருவில் நின்று கொண்டிருந்தார்.

கெட்டிக்கார மாணவனாகவும், விளையாட்டில் ஆர்வமானவனாகவும், அறியப்பட்ட அஸ்ரர் கானின் உயிரிழப்பு ஏற்கனவே பதற்றத்திலிருந்த சூழலில், மீண்டும் ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது.

அஸ்ரர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நெற்றியில் புகைக்குண்டின் சிலிண்டரும் உலோக பெல்லட் குண்டுகளும் அஸ்ரர் கானின் நெற்றியில் பட்டதாகக் குற்றம் சுமத்துகிறார் ஃபிர்தூஸ் அகமது கான். அஸ்ரருடன் விளையாடிக் கொண்டிருந்த அவனின் நண்பன் இந்திய துணை ராணுவப் படை அவனை சுட்டதாக தெரிவிக்கிறான்.

மறுக்கும் ராணுவம்

அஸ்ரரின் மருத்துவ அறிக்கை அவர் பெல்லட் குண்டுகளாலும், கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததாலும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கிறது. ஆனால் காஷ்மீரில் உள்ள இந்தியாவின் உயர் ராணுவ கமாண்டர், லெஃப்டினட் ஜெனரல் கே.ஜே.எஸ்.தில்லான், காஷ்மீர் போராட்டக்காரர்கள் ஆயுதப்படைகள் மீது எறிந்த கற்கள் அஸ்ரர் மீது பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அஸ்ரர் மருத்துவ அறிக்கை
Image captionஅஸ்ரர் மருத்துவ அறிக்கை

பிபிசியிடம் பேசிய காஷ்மீர் போலிஸாரும் இதையே தெரிவித்தனர்.

மருத்துவமனை அறிக்கை தெளிவற்றதாக இருப்பதாகவும், அதுகுறித்து மேலும் விசாரணைகள் தேவை என்றும் தெரிவிக்கின்றனர்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து இந்தியா அறிவிப்பு வெளியிட்ட நாளில்தான், இந்த சம்பவம் நடைபெற்றது.

எதிர்பாராத இந்த அறிவிப்பு வெளியான நாளுக்கு முன்பாக, தொடர்ந்து சில நாட்களாக பல்லாயிரக் கணக்கான இந்தியத் துருப்புக்கள் அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இந்துக்களின் புனித யாத்திரை ஒன்று ரத்து செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து கிளம்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன.

மேலும் இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

94 சதவீதம் மதிப்பெண்

உயிரிழந்த அஸ்ரர் தனது 10-வது வகுப்புத் தேர்வில் 94 சதவீதம் மதிப்பெண் பெற்றதைக் காட்டும் ஒரு ரேங்க் கார்ட்டும், கிரிக்கெட் கோப்பையுடன் அவரின் புகைப்படம் உள்ள ஒரு செய்தித்தாளும்தான் தற்போது அவரின் குடும்பத்துக்கு விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள்.

அஸ்ரர் மதிப்பெண்
Image captionஅஸ்ரர் பெற்ற மதிப்பெண்

”இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எனது வலியை அறிவாரா? இதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா? இது குறித்து அவர் கண்டனம் தெரிவித்தாரா?” என்று அஸ்ரரின் தந்தை பிபிசியிடம் வினவினார்.

”நாளை உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம். இன்றைய காஷ்மீரில் யாரும் எதற்கும் பொறுப்பேற்பதில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையால் ஒரு உயிரிழப்பு கூட நடக்கவில்லை என்று இந்திய அரசு தெரிவித்தது. ஆனால், அரசு எதிர்ப்பு போராட்டங்களில் எறியப்பட்ட கற்களால் தாக்கப்பட்டு அஸ்ரார் உள்பட இரண்டு பேர் இறந்ததாக அரசு கூறுகிறது.

ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்களால் மேலும் மூவர் இறந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

குலாமை சுட்டது யார்?

கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதியன்று, 60 வயதான குலாம் முகமது என்ற கடைக்காரர் கடையின் உள்ளே தனது மனைவியுடன் அமர்ந்திருந்தபோது மோட்டார் பைக்கில் வந்த மூன்று பேர் அவரை சுட்டு விட்டுத் தப்பியோடியுள்ளனர்.

காஷ்மீர்: சர்ச்சைக்குரிய மரணங்கள் - என்ன நடக்கிறது அந்நிலத்தில்? #GroundReportபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடையைத் திறக்கக்கூடாது என்ற தீவிரவாத குழுக்களின் எச்சரிக்கையை மீறி கடையைத் திறந்ததால் குலாம் முகமது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற யூகம் நிலவுகிறது.

குலாம் முஹமதின் குடும்பத்தினரை பிபிசி சந்தித்தபோது, அவர்கள் இது குறித்துப் பேச அச்சப்பட்டனர். குலாம் கொலை செய்யப்பட்டதன் உள்நோக்கம் குறித்து தாங்கள் விசாரணை செய்து வருவதாக போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர்.

ஆனால், அண்மைய நாட்களில் இறந்த தங்களின் உறவுகள், நண்பர்களின் எண்ணிக்கைக்கும், அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கைக்கும் வேறுபாடு உள்ளதாகப் பலர் கூறுகின்றனர்.

Presentational grey line

இந்தியாவும் பாகிஸ்தானும் வேண்டாம் – போராடும் மக்கள்

Presentational grey line

பானுவின் கதை

அதில் ஒருவர் ரஃபிக் ஷாகூ. ஸ்ரீநகரில் உள்ள பெமினா பகுதியில் ஆகஸ்டு 9ஆம் தேதி, தனது மனைவி ஃபெமீடா பானுவுடன் தனது இரண்டடுக்கு மாடிக் கொண்ட வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே உள்ள பகுதியில் மோதல் வெடித்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களைக் கலைக்கப் பாதுகாக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் கண்ணீர்ப் புகை தனது வீட்டைச் சூழ்ந்து கொண்டதாகவும், 34 வயதான ஃபெமீடா அதனால் மூச்சு திணறியதாகவும் தெரிவிக்கிறார்.

மூச்சு விடுவதில் சிக்கல் இருப்பதாக அவள் என்னிடம் தெரிவித்தாள். எனவே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவள் தொடர்ந்து என்னிடம் தனக்கு என்ன நடக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். மிகவும் பயந்துவிட்டாள். மருத்துவர்கள் அவளைக் காப்பாற்ற பெரிதும் முயன்றனர். ஆனால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.

பானுவின் மருத்துவ அறிக்கை அவர் விஷவாயுவை சுவாசித்தால் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கிறது. தற்போது பானுவின் கணவர் தனது மனைவியின் இறப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகத் தெரிவிக்கிறார்.

பானுவை போன்ற கதைதான் ஸ்ரீ நகரில் உள்ள சஃபகடல் பகுதியைச் சேர்ந்த 60 வயது முகமது அயூப் கானின் கதையும்.

ஆகஸ்டு 7ஆம் தேதி இந்த போராட்டம் வெடித்த போது அந்த பகுதியை அயூப் கான் கடந்து சென்றதாக அவரின் நண்பர் ஃபயஸ் அகமது கான் தெரிவிக்கிறார்.

கானின் காலுக்கடியில் இரண்டு கண்ணீர் புகைக் குண்டுகள் வந்து விழுந்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுவரை அவரின் இறப்பு குறித்து அவரின் குடும்பத்திற்கு எந்த ஓர் அறிக்கையும் தரப்படவில்லை.

ஆனால் கான் கண்ணீர் புகையைச் சுவாசித்ததால்தான் உயிரிழந்தார் என்று கூறுவது வதந்தி என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தகவல் தர மறுக்கும் போலீஸார்

அந்த பகுதியில் முழு அடைப்பு நடைபெற்று வந்தாலும், தடை உத்தரவு மீண்டும் மீண்டும் அமலில் இருந்தபோதும், அங்கு போராட்டக்காரர்கள், அரசுக்கும், பாதுகாப்புப் படைக்கும் எதிராகப் போராட்டங்கள் நடத்துகின்றனர். அது வன்முறையாகவும் மாறி வருகிறது.

காஷ்மீர்: சர்ச்சைக்குரிய மரணங்கள் - என்ன நடக்கிறது அந்நிலத்தில்? #GroundReportபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து மருத்துவமனைகள் எந்த தகவலையும் தர மறுக்கின்றன. காயமடைந்த பலர் தங்களின் காயங்களுக்கு முறையான சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்ல விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் கைது செய்யப்படலாம் என அஞ்சுகின்றனர்.

ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், மற்றும் வணிகர்கள் ஆகியோரை அரசு தடுத்து வைத்திருக்கிறது என நம்பப்படுகிறது. இதில் பலர் உள்ளூர் சிறையிலிருந்து நகரத்தின் வெளியே உள்ள பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

இதில் எத்தனை பேர் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என அறிவது கடினமாக இருந்தாலும், ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது காஷ்மீர் இதற்கு முன்னால் எதிர்கொண்ட அமைதியின்மையைவிட ஒப்பீட்டளவில் இது சிறியது.

காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், “2008, 2010 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் அதிகளவிலான மக்கள் உயிரிழந்தனர்.” என்கிறார்.

“பாதுகாப்புப் படை இரவும், பகலும் அயராது உழைத்து, எந்த தனி மனிதரையும் காயப்படுத்தாமல் அமைதியை உறுதிப்படுத்தி உள்ளனர்” என்று தெரிவிக்கிறார்.

தொலைத்தொடர்பு துண்டிப்பு, ராணுவ நடவடிக்கை காரணமாகத்தான் உண்மையான நிலவரம் இன்னும் முழுமையாக வெளியே தெரியவில்லை எனப் பலர் கூறுகின்றனர்.

காஷ்மீரில் நடைமுறையில் உள்ள பல தடைகள் எப்போது முடிவுக்கு வரும், அப்படி முடிவுக்கு வரும்பட்சத்தில் என்ன நடக்கும் என முழுமையாகத் தெரியவில்லை. -BBC_Tamil

TAGS: