கொடூரமாக தாக்கப்பட்ட மாணவி.. ஆசிரியை கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் அருகே அதிக மதிப்பெண் எடுக்க கூறி ஒன்றாம் வகுப்பு மாணவியை தாக்கி படுகாயம் ஏற்படுத்திய வழக்கில் டியூசன் ஆசிரியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு முதுகு, கை விரல்களில் படுகாயங்களுடன் இருக்கும் புகைப்படம் கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த மாணவி யார், எதற்காக தாக்கப்பட்டார் என்பதை கண்டறிய கோரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மனு அளித்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் காயமடைந்த மாணவி படுவாக்கரையை சேர்ந்தவர் என்றும் அவர் பெத்தேல்புரத்தைச் சேர்ந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. மேற்கொண்டு பள்ளியில் நடத்திய விசாரணையில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு எழுத வந்த மாணவி தேர்வறையில் திடீரென மயக்கமடைந்து விழுந்ததாகவும் விசாரித்ததில் மாணவி உடல் வலியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஆசிரியைகள் பரிசோதித்து பார்த்ததில் மாணவியின் முதுகில் பட்டை பட்டையாகவும், கையிலும் காயங்கள் இருந்ததை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அதிக மதிப்பெண் எடுக்க வலியுறுத்தி டியூசன் ஆசிரியை தாக்கியதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து படுவாக்கரை பகுதியை சேர்ந்த டியூசன் ஆசிரியை ஜெசிமோளை பிடித்து விசாரணை நடத்தியதில் மாணவியை கொடூரமாக தாக்கியதை ஒப்புக்கொண்டார்.

கணக்கு பாடத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவி மதிப்பெண்கள் குறைவாக பெறுவதாகவும் அவரை படிக்க வைப்பதற்காக கரண்டி மற்றும் பிரம்பால் தாக்கியதாகவும் அதனால் ஏற்பட்ட படுகாயத்தை மறைக்க மாணவியை வீட்டுக்கு அனுப்பாமல் தனது வீட்டிலேயே தங்க வைத்து கொண்டதாகவும் டியூசன் ஆசிரியை தெரிவித்துள்ளார்.

மாணவியின் பெற்றோரிடம் இரவு படிக்க வைத்து காலையில் தானே பள்ளிக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறிய டியூசன் ஆசிரியை, மறுநாள் வெள்ளிக்கிழமை அவரே பள்ளிக்கு அனுப்பிவைத்த நிலையில் தேர்வறையில் மாணவி மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்தே மாணவியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த நிலையில் படுகாயமடைந்த மாணவியை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த போலீசார், மாணவியின் தாய் ஞானபாய் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெசிமோள் மீது குழந்தைகள் வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனர்.

-athirvu.in

TAGS: