ஐநா பருவநிலை மாநாட்டில் நரேந்திர மோதி: “நிலக்கரி இல்லாத மின்சார இலக்கை இரட்டிப்பாக்குவோம்”

பல லட்சம் பேருக்கு தூய எரிவாயு இணைப்பு தந்துள்ளோம் என்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா.வின் பருவநிலை உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.

பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்க நியூயார்க்கில் ஐநாவின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர் கூடியுள்ளது. அப்போது பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்குரிய நடவடிக்கையை உலக நாடுகள் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

“பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்கு இந்த விவகாரத்தை அணுகும் முறையில் உலகளவில் மாற்றம் தேவைப்படுகிறது” என்று நரேந்திர மோதி பேசினார்.

நிலக்கரி இல்லாத மின்சாரம்; இலக்கை இரட்டிப்பாக்குவதாக ஐநாவில் மோதி அறிவிப்புபடத்தின் காப்புரிமைEZRA ACAYAN

மேலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, இந்தியா தனது நிலக்கரி இல்லாத மின்சார இலக்கை 400 ஜிகாவாட்டாக இரட்டிப்பாக்கும் என்று மோதி தெரிவித்தார்.

“இதுபோன்ற கடுமையான சவாலை நாம் சமாளிக்க வேண்டுமானால், இன்று நாம் செய்துக் கொண்டிருப்பது போதாது. இந்த விவகாரத்தில் உலகளாவிய நடத்தை மாற்றம் தேவை. இன்று இந்தியா இந்த தீவிரமான பிரச்சனையைப் பற்றி பேசுவதற்காக மட்டுமல்ல, ஒரு திட்டத்தை முன்வைப்பதற்காகவும் தான் இங்கு உள்ளது.

பேரழிவுகளை தடுக்கும் உள்கட்டமைப்பிற்காக இந்தியா ஒரு அணியை உருவாக்குகிறது. இந்த அணியில் இணைவதற்கு அனைத்து உலகத் தலைவர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு நேரடியான நடவடிக்கைகள் மட்டுமின்றி, கல்வி முதல் வாழ்க்கைப்போக்கு வரை அனைத்து படிநிலையிலும் மாற்றத்தை புகுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது உரையின்போது தெரிவித்தார்.

பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது. இது செயல்படுவதற்கான நேரம் என்று கூறி அவர் தமது உரையை அவர் நிறைவு செய்தார்.

‘ஆடம்பரமான பேச்சுகள் இல்லை’

இந்த ஒரு நாள் கூட்டம் வெறும் பேச்சு மட்டும் அல்லாமல் செயல்பாட்டை முன்னிறுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது என்று கூறுகிறார் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டானியோ குட்டரஸ்.

“ஆடம்பரமான உரைகளுடன் அல்லாமல், உறுதியான திட்டங்களுடன் வருமாறு நான் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்” என்று சிறப்பு கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பேசிய அவர் தெரிவித்தார்.

“தீர்வுகள், உறுதிமொழிகள் மற்றும் செயல்பாட்டையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அடுத்த தசாப்தத்தில் கார்பன் உமிழ்வை வியத்தகு முறையில் குறைப்பது குறித்தும், 2050ஆம் ஆண்டு வாக்கில் கார்பன் நடுநிலைமையை அடைவது குறித்தும் பல அர்த்தமுள்ள திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் அறிவிப்புகள் வெளிவரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார். -BBC_Tamil

TAGS: