தமிழ்நாட்டில் பொருளாதார சரிவு: சவாலை சமாளிக்குமா தொழில்துறை?

பிகாரில் இருந்து ராஜேஷ் குமார் தமிழகத்துக்குப் பிழைப்புத் தேடி வந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன.

ஜார்க்கண்ட் மாநில எல்லையை ஒட்டியுள்ள அவரது சொந்த மாவட்டமான கயாவில் வேளாண்மை மட்டுமே ஒரே வேலைவாய்ப்பாக இருந்தது. சொந்தத் தொழில் செய்வதற்கான சூழல் மற்றும் வேலை வாய்ப்புகள் இல்லை என்று பல லட்சம் வட இந்தியர்களைப் போல பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட ராஜேஷும் தமது 17வது வயதிலேயே கோவைக்கு வந்திறங்கினார்.

கோவை வந்தபின்தான் அவருக்குத் திருமணம் நடந்தது; கோவையில் ஈட்டிய வருவாயைத்தான் சுமார் 2500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கும் தமது பெற்றோருக்கு அனுப்பி வைத்தார் ராஜேஷ்.

வாரத்துக்கு ஆறு நாள் வேலை செய்துகொண்டிருந்த ராஜேஷ், சமீப மாதங்களாக வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் மட்டுமே வேலை செய்கிறார். அவரது வருமானம் கிட்டத் தட்டப் பாதியாகக் குறைந்துள்ளது. அவரது குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சனை இரட்டிப்பாகியுள்ளது.

இது ராஜேஷின் நிலை மட்டுமல்ல. அவரைப் போலவே கோவைக்கு வாழ்வு தேடி வந்த பல்லாயிரம் முதல் சில லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்களின் நிலையும் இதுதான்.

உலகமயமாக்கல் எப்படி ஒரு நாட்டில் உண்டாகும் பொருளாதார சரிவால் பிற நாடுகளையும் பாதிக்கிறதோ, அதே போல உள்நாட்டு இடப்பெயர்வால் தமிழகத்தில் உண்டாகியுள்ள பொருளாதார சிக்கல்கள் வெளி மாநிலங்களில் இருக்கும் பல லட்சம் குடும்பங்களையும் மோசமாகப் பாதிக்கிறது.

12 கோடி பேரின் வாழ்வாதாரம்

இந்தியாவிலேயே பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சி அதிகமாக உள்ள பகுதிகளில் ஒன்றான மேற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல லட்சம் உள்ளூர் தொழிலாளர்களின் நிலையும் இதுதான்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவைக்கு ஜவுளித் தொழில் மட்டுமல்லாது, இன்னொரு முக்கிய அடையாளம் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்.

இப்போது அவை அனைத்தும் சரிவை சந்தித்துள்ளது மட்டுமல்லாமல், மோசமாக முடங்கியும் உள்ளன.

கோயம்புத்தூர் தொழிலாளிகள்

“ஏப்ரல் மாதத்தில் சுமார் 10% அளவுக்கு சரிந்திருந்த தொழில்கள், ஆகஸ்டு மாதத்தில் சுமார் 40% வரை சரிந்துள்ளன. அதில் 50% வரை சரிவைச் சந்தித்துள்ள வார்ப்பட ஆலைகள் (பவுண்டரிகள்) மற்றும் 60-70% சரிவைச் சந்தித்துள்ள வாகன உதிரி பாக உற்பத்தித் தொழிலைச் சார்த்துள்ளவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்,” எனக் கூறுகிறார் கோவை மாவட்ட சிறு தொழிலதிபர் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் ராமமூர்த்தி.

“இந்தியா முழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிலைச் சார்ந்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 12 கோடி இருக்கும். வேளாண்மைக்கு அடுத்து அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் துறை இதுதான். பெருநிறுவனங்கள் ஒரு வேலைவாய்ப்பை உண்டாக்க செய்யும் முதலீட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களால் 10 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும். ஆனால், ஆண்டுக்கு பெருநிறுவனங்களின் மொத்த செலவில் 4-5% மட்டுமே தொழிலாளர்களுக்கு செலவிடும் நிலையில் நாங்கள் 12-15% வரை செலவிடுகிறோம்.”

“இந்திய அரசு இந்தியாவை ஐந்து ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக ஆக்க வேண்டும் எனும் இலக்கு வைத்துள்ளது. அந்த இலக்கை அடைய வேண்டுமானால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நன்றாக இருக்க வேண்டும், ” என்கிறார் ராமமூர்த்தி.

ராமமூர்த்தி

“சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மூலம் சமீப ஆண்டுகளில் 11 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க அவர்கள் பங்களிப்பு அவசியம்,” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் ஆகஸ்டு மாதம் டெல்லியில் நடந்த தொழில் கண்காட்சி ஒன்றில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ஒரே நாடு, ஒரே வரி, சமமற்ற போட்டி’

சமீபத்திய பொருளாதார மந்தநிலை காரணமாக கோவை தொழிற்துறைக்கு கிடைக்கும் உற்பத்தி முன்பதிவுகள் (ஆர்டர்கள்) குறைந்துள்ளன. அதுமட்டுமல்லாது, எப்போதும்போல விற்பனையாகும் எனும் நோக்கில் ஏற்கனேவே தயாரிக்கப்பட்ட சரக்குகளும் வாங்கப்படவில்லை என்பதால் அவை தேங்கியுள்ளன.

மேற்கண்ட இரு காரணங்களால் கோவையில் தொழில் நிறுத்தம் மற்றும் உற்பத்திக் குறைப்பு ஆகியவை நடந்துள்ளது.

கோயம்புத்தூர் தொழிற்சாலைகள்

சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி அமலாகும் முன்பு சிறு, குறு, நடுதரத் தொழில்களுக்கு ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் வருவாய் வரை வரி விலக்கு இருந்தது. ஜி.எஸ்.டி அமலானபின் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டும் தொழல்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

‘ஒரே நாடு, ஒரே வரி’ என்பதால் பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் சரக்குகளுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் சரக்குகளுக்கும் ஒரே வரி விகிதம்தான்.

அதாவது பிராண்டிங் செய்யப்பட்டு, பெரும் ஆலைகளில் இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்யப்பட்டு, குக்கிராமங்களில் கூட சந்தைப்படுத்தப்பட்ட பெரு நிறுவனங்களின் சரக்குகளுடன், இந்த சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் போட்டியிட வேண்டும். ஆனால், ஏற்கனேவே பெரு நிறுவனங்களின் ‘பிராண்ட்’ பெயர்கள் மக்கள் மத்தியில் பதிந்துள்ளதால் அவற்றின் விற்பனையே அதிகமாக இருக்கும்.

இதே சமமற்ற போட்டி முன்பும் இருந்தது. ஆனால், அந்த அளவுக்கு வரி விலக்கு, கடன் வசதி உள்ளிட்ட சலுகைகளும் இருந்தன. இப்போது அவை இல்லை என்பதால் சரிவு எளிதாகியுள்ளது.

வரிவிலக்குக்கான வரம்பை உயர்த்துதல், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் போன்றவை மூலம் வழங்கவும் தொழில் கடன்களைத் துரிதப்படுத்துதல் போன்றவற்றை சென்னையில் சமீபத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான சந்திப்பில் வலியுறுத்தியுள்ளதாக ராமமூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பொருளாதார சரிவை வாய்ப்பாக மாற்றுவது எப்படி?

வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி, மோட்டார் பம்புகள், உற்பத்தி துறையில் பயன்படுத்தப்படும் இரும்பு உபகரணங்கள் அனைத்தும் தயாரிக்கப்படும் வார்ப்பட ஆலைகள் (FOUNDRY) தொழில் நகரமான கோவையின் பொருளாதாரத்தின் முக்கியமான தூண்களில் ஒன்று.

கோயம்புத்தூர்

பொறியியல் சார்ந்த பிற துறைகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதால், அது ‘பொறியியல் தொழிற்துறைகளின் தாய்’ என்று கூறப்படும் பெருமையைப் பெற்றுள்ள வார்ப்பட ஆலைகளிலும் ஒட்டுமொத்தமாக எதிரொலிக்கிறது.

1997-98, 2008 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலில் தாங்கள் சந்திக்கும் மூன்றாவது பெரிய சரிவு இது என்கிறார் கோவையில் உள்ள வார்ப்பட ஆலை ஒன்றின் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன்.

தற்போது உற்பத்தி குறைவால் வாரத்துக்கு இரண்டு வார காலம் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்க வேண்டிய சூழலுக்கு தாங்கள் உள்ளாகியிருப்பதாகக் கூறும் அவர், இது பற்றி மிகவும் கவலைப் படத் தேவையில்லை என்கிறார்.

சீனாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்த பொருட்களுக்கு, வர்த்தகப் போர் காரணமாக பெரும் அளவில் வரிகள் உயர்த்தப்பட்டிருப்பதால், சீனாவுக்கு கிடைத்து வந்த தொழில் வாய்ப்புகள் குறைந்துள்ளன என்கிறார் அவர்.

விஸ்வநாதன்

அமெரிக்க – சீன வர்த்தகப் போர் என்பது நமக்கு ஒரு சாதகமான அம்சம். இது இந்திய வார்ப்படத் தொழில் துறையின் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சீனாவில் ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கையும் இந்தியர்களைவிடவும் குறைவு என்பதால் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுடன் தொழில் செய்யவே விரும்புவார்கள்.

“குழந்தைகூட இந்தியாவில் ஆங்கிலம் பேசுவதால் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக மேற்கு நாடுகளின் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.”

அதுமட்டுமல்லாது தற்போதைய பொருளாதார மந்தநிலையால், தொழில் துறையினருக்கு ஆலை விரிவாக்கம் மற்றும் இயந்திரங்களை நிறுவுவதற்கான செலவுகள் குறைந்துள்ளன. அவற்றில் இப்போது கவனம் செலுத்தினால், மீண்டும் பழைய நிலை வந்தபின் நமது உற்பத்தித் திறன் அதிகரிக்கும். இந்த சரிவு ஒன்றும் நிரந்தரமானதல்ல என்பதால் இப்போது செய்யும் விரிவாக்கம் நீண்ட கால அடிப்படையில் பலனளிக்கும் என்று கூறுகிறார் விஸ்வநாதன்.

கோயம்புத்தூர் தொழில்கள்

“அமெரிக்காவில் 1000 பேருக்கு 837 கார்கள் உள்ளன, ஆஸ்திரேலியாவில் 747 கார்கள் உள்ளன, சீனாவில்கூட 173 கார்கள் உள்ளன. ஆனால், இந்தியாவில் 1000 பேருக்கு 22 கார்களே உள்ளன. இது இந்தோனீசியாவின் 87, நைஜீரியாவின் 64 எனும் எண்ணிக்கையைவிடக் குறைவு. எனவே, இப்போது தற்காலிக சரிவு இருந்தாலும் எதிர்காலத்தில் சந்தை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பதே,” என சோதனைக் காலத்தையும் சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற மாற்று யோசனையை முன்வைத்தார் விஸ்வநாதன். -BBC_Tamil

TAGS: