கீழடி அகழ்வாய்வுகள் மிக மிக முக்கியமானவை ஏன் தெரியுமா? சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: கீழடி அகழாய்வுகள் மற்ற அகழாய்வுகளைவிட மிக முக்கியமானவை ஏன் என்பது குறித்து சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் விளக்கம் தந்துள்ளார்.

இது தொடர்பாக தமது ஃபேஸ்புக்கில் ஆர். பாலகிருஷ்ணன் எழுதியுள்ளதாவது:

கேள்வி: கீழடி அகழ்வாய்வுகள் உண்மையில் எவ்வளவு முக்கியமானவை ? இந்த அகழ்வாய்வுகளின் முக்கிய பங்களிப்பு என்ன?

விடை: கீழடி அகழ்வாய்வுகள் மிக மிக முக்கியமானவை. காரணங்கள்.

  1. பழந்தமிழ் நாட்டில் நகர வாழ்வியலுக்கான முதல் அகழ்வாய்வுத் தடயம் கீழடி. இதற்கு முன் ஆதிச்சநல்லூரில் கிடைத்த புதைகுழிப் பகுதிகளில் கிடைத்த தரவுகள் மேலும் முன்னெடுக்கப்படவில்லை. அரிக்கமேடு, கொடுமணல், அழகன்குளம் போன்ற பல அகழ்வாய்வுகள் உள்நாட்டு வெளிநாட்டு வணிக மரபிற்கு சான்றளித்தன. ஆனால் நகர வாழ்க்கை குறித்த தடயங்கள் இல்லை என்ற குறையை தீர்க்கிறது கீழடி.

  2. இந்தியாவின் ஆகச் சிறந்த வாழ்வியல் இலக்கியமான சங்க இலக்கியம் தீட்டும் துல்லியமான சொற்சித்திரம் கற்பனையான கட்டுக்கதை அல்ல; அவற்றில் பண்பாட்டு வரலாற்றுக்கான வழிகாட்டுதல்களும் அடங்கியுள்ளன என்ற கருத்தை கீழடி மெய்ப்பிக்கிறது.

  3. “தமிழி” யா தமிழ் பிராமி யா என்ற சொல்லாடல்களை விட என்பதை விட முக்கியமானது இந்த மண்ணில் தமிழ் மொழி சார்ந்த வரிவடிவத்தின் கால நிர்ணயம் கி.மு 6 ஆம் நூற்றாண்டிற்கு நகர்ந்துள்ளது என்பது தான். (இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.). அத்தகைய ஆய்வாளர்கள் சொல்வதை திறந்த மனதோடு செவி மடுக்க வேண்டும். இதில் முரண்பட்ட கருத்துகளுக்கு வாய்ப்பு உள்ளது என்பதை முதலில் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

  4. நான்காம் கட்ட‌ ஆய்வில் மட்டும் 1001 பானைக்கீறல்கள் கிடைத்துள்ளன என்பது மகிழ்ச்சிக்குரியது. இவற்றில் சில சிந்துவெளி பொறிப்புகளோடு ஒத்துப் போகின்றன என்பதும் கவனத்திற்கு‌‌ உரியது. சிந்துவெளி- தமிழ்த் தொடர்பை இதை வைத்து மட்டுமே வைத்து உறுதி செய்யமுடியாது என்பது உண்மைதான். ஆனால் சிந்துவெளி- சங்க காலம் – தமிழக பானைக்கீறல்களை பொருத்திப் பார்ப்பது இது முதல் தடவை அல்ல. பல. அறிஞர்கள் இதுபற்றி ஏற்கனவே பேசியிருக்கிறார்கள். கீழடியில் இது மேலும் தெளிவாகிறது அவ்வளவுதான்.

அதே நேரத்தில் சிந்துவெளி பொறிப்பை போலவே இதன் பொருள் என்ன என்பது புரியாவிட்டாலும் இது முக்கியமான துணைச்சான்று என்பதை மறுக்கமுடியாது. இவ்வாறு ஆர். பாலகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: