பரம்பிக்குளம் ஆழியாறு பிரச்சனைகளை பேசி தீர்க்க 10 பேர் குழு.. எடப்பாடி-பினராயி கூட்டாக பேட்டி

திருவனந்தபுரம்: பேச்சுவார்த்தையை இனிதே துவக்கி உள்ளோம்.. தமிழகம் மற்றும் கேரளா இடையே நதிநீர் பிரச்சனைகளை பேசி தீர்க்க இரு மாநிலங்களைச் சேர்ந்த 10 பேர் கொண்ட (தலா 5 பேர் இரு மாநிலத்திலும் ) அதிகாரிகள் அடங்கிய கமிட்டி அமைத்துள்ளோம் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தான் கமிட்டி குறித்த தகவலை இரு மாநில முதல்வர்களும் தெரிவித்தனர்.

15 ஆண்டுகளுக்கு பிறகு நீர் பங்கீடு குறித்து தமிழகம் கேரளா இடையே இன்று திருவனந்தபுரத்தில் நடந்தது. கேரளா முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள நதி நீர் பிரச்சனையை தீர்க்க கமிட்டி அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இப்பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

கேரள முதல்வர் பேட்டி

அப்போது கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், கேரள தமிழக மக்கள் சகோதரர்களாக வாழ்கிறர்கள், பரம்பிக்குளம் -ஆழியாறு 60 ஆண்டுக்கு முன் போடப்பட்டது, முல்லை பெரியாறு விவகாரத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன. முல்லை பெரியாறு பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம். பாண்டியாறு-புன்னம்புழா பிரச்சனை குறித்து விவாதிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு எப்போது பேச்சவார்த்தை நடத்தும் என்பது ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

அதிகாரிகள் குழு

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 15 ஆண்டுகளுக்கு பிறகு நீர் பங்கீடு குறித்து தமிழகம் கேரளா பேச்சுவார்த்தை இன்று நடந்தது. இன்றைய பேச்சுவார்த்தை சுமூக நடந்து முடிந்துள்ளது, பரம்பிக்குளம் -ஆழியாறு நீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களிலும் இருந்து தலா ஐந்து பேர் கொண்ட குழு (மொத்தம் 10பேர்)அமைக்கப்படும். இந்த அதிகாரிகள் குழுவின் ஆய்வுக்கு பின்னர் இத்திட்டம் நிறைவேற்றப்படும். பாண்டியாறு-புன்னம்புழா பிரச்சனையை விவாதிக்கவும் தனி கமிட்டி அமைக்கப்படும்: அதில் உள்ள நிலைகள் ஆய்வு செய்து அந்த திட்டமும் நிறைவேற்றப்படும்.

முல்லை பெரியாறு

ஆணைமலையாறு-நீராறு- நல்லாறு திட்டம் , சிறுவாணி பிரச்சனை உள்ளிட்டவையும் ஐந்து பேர் கொண்ட இந்த கமிட்டி மூலம் தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முல்லை பெரியாறு அணையை பொறுத்தவரை ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் உள்ள பிரச்சனைகளை ஆய்வு செய்து அதையும் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இனிதே துவக்கம்

தமிழகம் மற்றும் கேரளா மக்கள் அனைவரும் சகோதர்களாக இருக்கிறார்கள். இரு மாநிலத்திற்கும் பிரச்சனை இல்லாமல் நீர் பங்கீடு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்காகத்தான் இந்த பேச்சுவார்த்தை இன்று நடத்தப்பட்டது. இன்னும் சிறு சிறு பிரச்சனைகள் எல்லாம் கமிட்டி மூலம் பேசி தீர்க்கப்படும் என்று கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டது. வருடத்திற்கு இரண்டு முறை இரண்டு மாநில தலைமைச் செயலாளர்கள் சந்தித்து பேசுவார்கள், இரு மாநிலங்களுக்க இடையேயான பிரச்சனையை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். அதன் பின்னர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்காகத்தான் இன்று பேச்சுவார்த்தை என்பது இனிதே துவங்கி உள்ளது” என்றார்.

tamil.oneindia.com

TAGS: