நிர்பயா கொலை குற்றவாளிகள் – பிப்ரவரி 1-ந் தேதி தூக்கு

பிப்ரவரி 1-ந் தேதி தூக்கில் போடப்பட இருக்கும் நிர்பயா கொலை குற்றவாளிகள் நான்கு பேரிடமும், அவர்களுடைய கடைசி ஆசை என்ன என்று திகார் சிறை அதிகாரிகள் கேட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் குற்றவாளிகளிடம், அவர்களுடைய கடைசி ஆசை என்ன என்று கேட்கப்படுவது வழக்கம். அதன்படி முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய நான்கு பேரிடமும், அவர்களுடைய கடைசி ஆசை என்ன என்பதை தெரிவிக்குமாறு திகார் சிறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

“தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவர்களுடைய கடைசி ஆசை என்ன என்பதை எழுத்துபூர்வமாக பட்டியலிடுமாறு கேட்டு இருக்கிறோம். மேலும் உறவினர்களில் யாரையாவது சந்திக்க விரும்புகிறீர்களா, உங்களது உடைமைகளை யாரிடம் ஒப்படைக்க விரும்புகிறீர்கள், என்பது பற்றியும் கேட்டு இருக்கிறோம். ஆனால் அவர்களில் யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை. அவர்களுடைய பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 2012 ஆம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சம்பவத்தில் அவருடைய நண்பரும் தாக்கப்பட்டார். மிகவும் மோசமாக காயமடைந்த அம்மாணவியை சாலையோரம் அக்கும்பல் தூக்கி எறிந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, 13 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.

bbc.com/tamil