டிரம்ப் வருகை நெருங்கும்நிலையில் குடிசைகளை காலி செய்ய நோட்டீஸ்

டிரம்ப் வருகை நெருங்கும்நிலையில் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வரும் 45 குடும்பங்களுக்கு ஆமதாபாத் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆமதாபாத்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், 2 நாட்கள் பயணமாக 24-ந் தேதி இந்தியாவுக்கு வருகிறார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மோதரா பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவரும், பிரதமர் மோடியும் பேசுகிறார்கள்.

இந்நிலையில், அந்த மைதானத்துக்கு ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வரும் 45 குடும்பங்களுக்கு ஆமதாபாத் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், அவர்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும், எனவே, 7 நாட்களுக்குள் குடிசைகளை காலி செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் குடிசைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு குடிசைவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும், டிரம்ப் வருகைக்காக தங்களை காலி செய்யச் சொல்வதாகவும் சைலே‌‌ஷ் பில்வா என்பவர் குற்றம் சாட்டினார். ஆனால், டிரம்ப் வருகைக்கும், நோட்டீசுக்கும் சம்பந்தம் இல்லை என்று மாநகராட்சி அதிகாரி சைதன்ய ‌ஷா தெரிவித்தார்.

டிரம்ப் செல்லும் பாதையில் குடிசைகளை மறைக்க சுவர் கட்டப் படுவதாக ஏற்கனவே சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

maalaimalar