இந்தியாவில் ஆண்களுக்கு சமமான உரிமை பெண்களுக்கு இருக்கிறதா
இந்தியாவில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறது என ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் நினைக்கின்றனர்.
இந்தியா முழுவதும் 14 மாநிலங்களில் 10,000க்கும் மேற்பட்டோரிடம் இது குறித்து கேட்டறிந்தது. அதில் 91 சதவீதம் பேர் ஆம் என்றே பதில் அளித்துள்ளனர்.
இந்த ஆய்வில் பங்கேற்ற மூன்றில் இரண்டு பங்கு பேர் கடந்த இரண்டு தசாப்தங்களாக பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள். மேலும் பெரும்பாலானவர்கள் பெண்கள் தற்போது ஆண்களுக்கு நிகராக நன்றாக வாழ்ந்து வருகின்றனர் என்று கருதுகின்றனர்.
கிராமப்பகுதியிலிருப்பவர்கள் கூட பெண்களுக்கு ஆண்களை விட சிறப்பான வாழ்க்கை அமைகிறது எனக் கருதுகின்றனர்.
இதிலிருந்து அனைவரும் சமத்துவம் என்ற கொள்கை, நடப்பில் பின்பற்றப்படுகிறது எனவும் நம்புகின்றனர். ஆனால் இது உண்மையா?
சமத்துவம் நிலவுகிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை பல்வேறு காரணிகள் ஏற்படுத்துகிறது.
அண்மையில் #MeToo போன்ற பிரசாரங்கள் பாலியல் தொந்தரவு செய்தவர்களை கேள்விக்குள்ளாக்கியது.
கடந்த தசாப்தத்தில், பெண்கள் நலன் தொடர்பான செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் தந்த அழுத்தத்தால் பல சட்டங்கள் அரசால் உருவாக்கப்பட்டன. இதில் குடும்ப சட்டங்களான சொத்துரிமை, விவாகரத்து, தத்தெடுத்தல் ஆகியவற்றிலிருந்து பாலியல் வன்கொடுமை போன்ற குற்றப்பிரிவு சட்டங்கள் வரை பல வகையான சட்டங்கள் உருவாக்கப்பட்டு, விரைவில் நீதி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முயற்சிகளுக்கு பிறகும் இன்னும் பல பெண்கள் ஆண்களுக்கு சமமான அல்லது மேம்பட்ட ஒரு வாழ்க்கை வாழவில்லை என்பதே உண்மை.
பின்வரும் பிபிசி கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் இந்த வேறுபாட்டை தெளிவுப்படுத்தும்.
இந்தியாவில் பெரும்பாலும் ஆண் குழந்தைகள் பிறப்பதற்கு விருப்பம் காட்டப்படுகிறது என்கிறது தொடர்ந்து சரிந்துவரும் குழந்தை பாலின விகிதம். 2011ல் வெளியிடப்பட்ட தரவின்படி இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து தற்போதுதான் குழந்தை பாலின விகிதம் மிகவும் குறைந்துள்ளது.
நீதி மன்றங்களில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகமாகியுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்காக விரைவு நீதிமன்றங்கள் கட்டாயமாக்கப்பட்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் இன்னும் வழக்குகளை முடிக்கமுடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
பாலியல் தொந்தரவுகள் தொடர்பான வழக்குகளை நிரூபிக்க கடினாமாக இருக்கிறது. மேலும் விசாரணையின்போது புகார் கொடுத்த பெண்கள் அவமானத்திற்கு உள்ளாகிறார்கள்.
மேலும் கர்ப்பிணி பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. உலகளவில் நாள் ஒன்றுக்கு 800 கர்ப்பிணி பெண்கள் குழந்தைப்பேறு தொடர்பாக உயிரிழக்கின்றனர். இவற்றில் 20 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என யுனிசெஃப் அமைப்பு கூறுகிறது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள பெண்களில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூன்றில் ஒரு பங்கினர் வேலைக்கு செல்கின்றனர். உலகளவில் இருக்கும் தொழிலாளர்களில் பெண்கள் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கும் நாடு இந்தியாவே ஆகும்.
பிபிசி இதைப்பற்றி இன்னும் சில கேள்விகளை மக்களிடம் எழுப்பியது. அதன் மூலம் அவர்கள் சமத்துவம் என்பது என்ன என்று முழுமையாக தெரியாமலேயே சமத்துவம் பெற வேண்டும் என விருப்பம் கொண்டுள்ளனர் என தெரியவந்தது.
நான்கில் மூன்று பங்கு பெண்கள் தேவைப்பட்டால் வெளியில் சென்று வேலை செய்யலாம் என்றும், மூன்றில் ஒருவர் திருமணத்திற்கு பிறகு வெளியில் சென்று வேலை செய்வது தவறு என்றும் நினைக்கின்றனர்.
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மிசோரம் போன்ற மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் வெளியில் வேலைக்கு செல்கின்றனர். அதே நேரம் பிகார், உத்திர பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்கள் வேலைக்கு மிகக் குறைவாகவே செல்கின்றனர் எனவும் தெரிகிறது.
சிலர் மட்டுமே பெண்கள் பொருளாதாரத் தேவைக்காக மட்டுமல்லாமல் பிற காரணங்களுக்காக வேலைக்கு செல்லலாம் எனக் கருதுகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் குடும்பப் பொருளாதாரத் தேவைக்கு மட்டுமே பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என நினைக்கின்றனர்.
வேலைவாய்ப்புக்கு பற்றாக்குறையிருந்தால் ஆண்களே இருக்கும் வேலைகளை பெற வேண்டும் என நினைக்கின்றனர். மேலும் சமுதாயத்தில் பெண்கள் வீட்டைப் பார்த்துகொள்வதே மிக முக்கியம் என பெண்களே நம்புகின்றனர்.
ஆண் குழந்தைகளை விரும்புவது என்ற கோணத்தில் கேள்விகள் கேட்டபோது , பலர் தங்களுக்கு அப்படி எந்த விருப்பமும் கிடையாது என்றனர். ஆனால் மேற்படிப்பு பெண்களை விட ஆண்களுக்கே தேவை என நினைப்பதாக ஒத்துக்கொண்டனர்.
பெண்களை மையப்படுத்தி வாழும் சமுதாயம் அதிகமிருக்கும் மணிப்பூரில் பெண்களை விட ஆண்களுக்கு மேற்படிப்பு அதிகம் தேவை என்பதை மறுக்கிறார்கள்.
பாலியல் தொந்தரவு பற்றிய பார்வைகளே இதில் மிகவும் வருத்தப்பட வேண்டியவையாகும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாகியுள்ளன என்பதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் குடும்ப ஒற்றுமைக்காக அவற்றை அவர்கள் பொறுத்து போக வேண்டும் என்கின்றனர்.
மொத்தத்தில் இந்தியாவில், பெண்கள் உரிமை என கூறப்படுவதில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது என இந்த அறிக்கை கூறுகிறது.
குடும்பத்திலும் சமூகத்திலும் தங்கள் இடத்தை மாற்ற பெண்கள் போராடி வருகின்றனர். பெண்களின் வாழ்வை அவர்களே மாற்ற அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட அதிகாரத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்கவேண்டும்.
இந்த மாற்றத்தை புரிந்துகொள்ள கடினமாக இருப்பதால் இதை நடைமுறைபடுத்துதல் மெதுவாக இருக்கிறது. ஆனால் இந்த மாற்றத்தைப் புரிந்துகொண்டு பழைய சிந்தனைகளை மாற்ற வேண்டும் என்ற ஆசைக் கொண்டால் இந்த மாற்றம் விரைவில் நிகழும்.
- பிபிசி ஆய்வு