ஈரானில் மீட்கப்பட்ட 58 இந்தியர் தாயகம் திரும்பினர்

புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள ஈரான் நாட்டில் இருந்து முதல்கட்டமாக 58 இந்தியர்கள், தனி விமானம் மூலம் காசியாபாத் அழைத்து வரப்பட்டனர்.

சீனாவில் உண்டான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனா, இத்தாலியை தொடர்ந்து ஈரானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். ஈரானில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அவர்களை மீட்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, இதற்கான நடவடிக்கைகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் துவக்கியது.

இந்தியர்களை மீட்பதற்காக, உ.பி., மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து சி17 என்ற விமானம் நேற்று(மா்ரச்9) ஈரான் கிளம்பியது. அதில், மருத்துவ குழுவினரும் சென்றனர்.

முதல்கட்டமாக, ஈரானில் வசித்த 58 பேருடன், டெஹ்ரானில் இருந்து கிளம்பிய, விமானம் காலை உ.பி., மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அங்குள்ள மற்ற இந்தியர்களும் விரைவில் மீட்டு தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர்.

dinamalar