கொரோனா அச்சம் – பஸ், ரெயில்களில் கூட்டம் குறைந்தது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வெளியூருக்கு பஸ் மற்றும் ரெயிலில் செல்பவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

புதுடெல்லி: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 7984 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேரை நோய் தாக்கி உள்ளது. சுமார் 54 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர். எனவே, மேலும் நோய் பரவி விடாமல் தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

மக்கள் அதிகமாக கூடும் தியேட்டர்கள், மால்கள், பொழுதுபோக்கு கூடங்கள் உடற்பயிற்சி கூடங்கள் போன்றவற்றை மூட உத்தர விடப்பட்டுள்ளது. பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அத்தியாவசிய பயணத்தை தவிர மற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து, துருக்கி, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளுக்கான விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தலால் மக்களே தானாக முன்வந்து நடமாட்டத்தை குறைத்துள்ளனர். இதனால் தெருக்களில் வாகன போக்குவரத்து பாதிக்கு மேல் குறைந்துவிட்டது.

பஸ், ரெயில், கார்கள் போன்ற வாகனங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக ரெயில்களில் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர். முன்கூட்டியே பதிவு செய்தவர்களும் ரத்து செய்து வருகிறார்கள்.

இதனால் பெரும்பாலான ரெயில்களில் கூட்டம் குறைந்துள்ளது. எனவே ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்திருக்கிறார்கள். சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 6 பெட்டிகள் குறைக்கப்பட்டன.

ஏராளமான ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 71 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. மத்திய ரெயில்வே 23 ரெயில்களையும், தென் மத்திய ரெயில்வே 29 ரெயில்களையும், மேற்கு ரெயில்வே 10 ரெயில்களையும், தெற்கு ரெயில்வே 9 ரெயில்களையும் ரத்து செய்திருக்கிறது.

இன்றைய நிலவரப்படி ரத்து செய்யப்படும் ரெயில்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 85 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பொதுமக்களும் வெளியூர்களுக்கு செல்வதற்கு பயப்படுகிறார்கள். ரெயில், பஸ்களில் சென்றால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் பயணத்தை ரத்து செய்து வருகிறார்கள்.

கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் ரெயில்களில் தங்களது முன்பதிவை ரத்து செய்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் ரெயில்களில் கூட்டம் குறைந்துள்ளது. நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சுமார் 20 சதவீத பயணிகளுடன்தான் சென்றன.

தமிழ்நாட்டிலும் பஸ், ரெயில்களில் கடந்த சில தினங்களாக கூட்டம் குறைந்து விட்டது. நேற்று முதல் பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வெறிச்சோடும் நிலைக்கு தள்ளப்பட்டன. சென்னையில் மின்சார ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 26 சதவீதம் குறைந்துள்ளது.

மெட்ரோ ரெயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல நீண்ட தூரம் செல்லும் பகல் நேர பேருந்துகளிலும் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

ரெயில் நிலையங்களில் கூட்டங்களை தவிர்க்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பயணிகளை வழியனுப்ப வரும் உறவினர்கள், நண்பர்கள் ரெயில் நிலையத்திற்கு வருவதை கட்டுப்படுத்த திட்டமிட்டனர்.

அதன் அடிப்படையில் ரெயில்வே பிளாட்பாரம் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 250 ரெயில் நிலையங்களில் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

பெருநகரங்களில் மக்கள் முக்கிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே சென்று வருகிறார்கள். இதனால் டவுன் பஸ்களில் கூட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. அதேபோல வெளியூருக்கு பஸ்சில் செல்பவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருக்கிறது.

மார்க்கெட்டுகளுக்கு கூட்டம் வருவதும் மிகவும் குறைந்திருக்கிறது. பெரும்பாலான மக்கள் அருகில் உள்ள கடைகளிலேயே பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் மார்க்கெட் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் வெறிச்சோடி கிடக்கின்றன.

வெளியே நடமாடுபவர்கள் முகமூடி கவசம் அணிந்து செல்வதும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் அவற்றுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

திருமணம் மற்ற விழாக்கள் போன்றவற்றிலும் முந்தைய அளவிற்கு கூட்டம் இல்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் குடும்பத்தோடு கலந்து கொள்வதும் குறைந்திருக்கிறது. மொத்தத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை அனைத்து பகுதிகளிலும் நிலவுவதை காண முடிகிறது.

maalaimalar