கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவிடம் ஆற்றல் உள்ளது: உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: கொரோனா போன்ற தொற்று வைரஸை எதிர்கொள்ள இந்தியா மிகப்பெரிய ஆற்றலை கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரியான் தெரிவித்துள்ளார்.

‘கொரோனா வைரஸ்’ தடுக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரியான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள நாடுகளில் இந்த வைரஸ் எதிர்வரும் நாட்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவும் மக்கள் தொகை அதிகம் கொண்டதாக இருக்கிறது.

ஆனால், உலகளாவிய தொற்றுகளான சின்னம்மை மற்றும் போலியோவை இந்தியா ஒழித்தது போல, கொரோனாவை எதிர்கொள்வது பற்றியும் உலகிற்கு வழிநடத்த வேண்டும். தொற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா மிகப்பெரிய ஆற்றலை கொண்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் முன்பு எதிர்கொண்டதை போல உலகிற்கே வழிகாட்டியாக இருப்பது முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar