புதுடெல்லி, பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அதுபோல் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் அவர் உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அந்த நோயை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில் கூறியதாவது:-
அன்பான மக்களே இந்த மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நான் இதுவரை பல்வேறு பிரச்சினைகள், விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறேன். இன்றைய நிகழ்ச்சியில் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பெருந்தொற்று நோயான கொரோனா பற்றியும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றியும் உங்களுடன் எனது கருத்துகளை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
உங்களுக்கெல்லாம் என்மீது கோபமும், வருத்தமும் இருக்கும். உங்களை வீட்டுக்குள் முடக்கி போட்டி இருப்பதற்காக என் மீது கோபத்துடன் இருப்பீர்கள். இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 130 கோடி மக்கள்தொகை கொண்ட தேசத்தை நோய்க்கிருமியின் பாதிப்பில் இருந்து காப்பாற்ற இதைவிட வேறு வழி இல்லை.
கொரோனாவுக்கு எதிரான போராட்டம் என்பது வாழ்வா? சாவா? போராட்டம் ஆகும். இதனால் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஆகிறது. அப்படி நடவடிக்கைகளை எடுத்து இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். குறிப்பாக ஏழை மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக நான் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
கொரோனாவுக்கு எதிரான போர் மிகவும் கடினமானது. எனவே நாம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். நாம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால்தான் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெற முடியும். இல்லையேல் நாம் வெற்றி பெறுவது கடினமாகிவிடும்.
ஒட்டுமொத்த உலகத்தையும் வீட்டுக்குள் முடக்கி போட்டு இருக்கும் கொரோனா அறிவுலகத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. பிராந்தியம், நாடு, பருவகாலம் என்ற வரையறைக்குள் அடங்காமல் ஏழை, பணக்காரன், பலசாலி, பலவீனமானவன் என்று பாராமல் அனைத்து தரப்பினரையும் தாக்குகிறது.
ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படவேண்டும். அதற்கான பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. கொரோனா வைரஸ் போன்றவற்றை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். இல்லையேல் அது தீர்க்க முடியாதது ஆகிவிடும்.
அதனால்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொருவரும் தங்களுடைய நலன் கருதியும், குடும்பத்தினரின் நலன் கருதியும், மற்றவர்களின் நலனை கருத்தில் கொண்டும் இதை பின்பற்றி நடக்க வேண்டும். ஒரு சிலர் ஊரடங்கை மீறி நடந்து கொள்வது வருத்தம் அளிப்பதாக உள்ளது.
இது நமக்கு நாமே விதித்துக்கொண்ட கட்டுப்பாடு என்பதால் அனைவரும் அதை பின்பற்றி நடப்பார்கள் என்றும், யாரும் சட்டத்தை மீறி நடந்துகொள்ள மாட்டார்கள் என்றும் நம்புகிறேன். மீறுபவர்கள் உயிருடன் விளையாடுகிறார்கள் என்றுதான் அர்த்தம்.
உலகில் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். எனவே ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது
சமூக விலகல் என்பது சமூகத்தில் யாருடனும் பேசாமல் இருப்பது அல்ல. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பழைய நண்பர்களுடன் தங்கள் தொடர்பை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த நாட்களில் இசை கேட்பது, தோட்டத்தில் செடிகள் வைத்து பராமரிப்பது போன்ற தங்கள் பழைய பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
நோய்க்கிருமியை ஒழிப்பதற்காகத்தான் நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு இருக்கிறோம். ‘லட்சுமண ரேகை’ என்ற அந்த கட்டுப்பாடுகளை நாம் இன்னும் சில நாட்களுக்கு பின்பற்றி கொரோனாவை முறியடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியர்கள் அனைவரும் மன தைரியத்துடன் செயல்படவேண்டும்.
நோய் பரவுவதை தடுக்க ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதுதான் சிறந்த வழி. தனிமைப்படுத்தும் நடவடிக்கையை பின்பற்றாததால் ஏற்பட்ட பாதிப்பை உலகம் முழுவதும் உள்ள மக்கள் தற்போது உணர தொடங்கி இருக்கிறார்கள். எனவே இந்த விஷயத்தில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
டாக்டர்கள், நர்சுகள், துணை மருத்துவ பணியாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து கொரோனாவுக்கு எதிரான போர்க்களத்தில் முன்னணியில் நின்று போராடுகிறார்கள்.
அப்படி போராடுபவர்களில் சிலருடன் நான் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர்களுடைய சேவை மனப்பான்மையை பாராட்டி நன்றி கூறியதுடன், அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தேன். தன்னலமற்ற சேவையாற்றும் அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும். மருத்துவத்துறையினர், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நாம் ஒத்துழைப்பு அளித்து கொரோனாவை ஒழிப்போம். இந்த விஷயத்தில் நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மோடி தனது உரையின் போது, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் என்ஜினீயருடன் பேசியது பற்றியும், அவர் தெரிவித்த கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.
இதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் டெல்லியைச் சேர்ந்த டாக்டர் நிதிஷ் குப்தா, புனேயைச் சேர்ந்த டாக்டர் போர்ஸ் மற்றும் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தினர் பற்றி ஆக்ராவைச் சேர்ந்த ஷூ தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்த கருத்துகளையும் மோடி பகிர்ந்து கொண்டார்.
dailythanthi