இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. பலி 26 ஆனது. நாடு முழுவதும் அனைத்து மாநில, மாவட்ட எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டது.

புதுடெல்லி,  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று ஊரடங்கின் 6-வது நாளாகும்.

பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டதால் வேலை இழந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்வதற்காக நெடுஞ்சாலைகளில் சென்ற வண்ணம் உள்ளனர். அவர்களில் பலருக்கு உணவோ, தங்குமிடமோ இல்லை.

பல்வேறு அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள், ரெயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள், மத அமைப்புகள் அவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றன. ஆனாலும் அவர்களில் பலர் பாதுகாப்பு வளையத்துக்கு வெளியேதான் இருக்கிறார்கள்.

உத்தரபிரதேசத்தில் 200 கி.மீ. தூரத்துக்கு மேல் நடந்த ஒரு தொழிலாளி மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவர் டெல்லியில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு சென்றுகொண்டிருந்தார்.

டெல்லி, மராட்டியம், கேரளா போன்ற சில மாநிலங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நிவாரண முகாம்களில் இருந்து வெளியே வந்து தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கும்படி கூறிவருகிறார்கள்.

டெல்லியில் நடந்துசென்ற சாவித்ரி (30) என்ற தொழிலாளி கூறும்போது, “ஏதோ வைரஸ் நம்மை கொன்றுவிடும் என்று சொல்கிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு தாயாக என் குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியவில்லையே என்ற வேதனைதான் எனக்கு இருக்கிறது. உதவி செய்ய ஒருவரும் இல்லை, அனைவரும் தங்கள் உயிர் பற்றியே கவலைப்படுகிறார்கள்” என்றார்.

தொழிலாளர்கள் இப்படி பல்லாயிரக்கணக்கில் நாடு முழுவதும் நடந்து சென்று கொண்டிருப்பதால் தொற்றுநோய் பரவுமோ என்ற பீதியும் எழுந்துள்ளது.

இதில் சமுதாய அளவில் வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதால், மத்திய அரசு அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூடும் உத்தரவுகளை கடுமையாக கடைபிடிக்க அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மீறுபவர்களை 14 நாட்கள் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் காணொலி காட்சி மூலம் அனைத்து தலைமை செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

தொழிலாளர்களுக்கு இந்த 21 நாட்களுக்கும் சேர்த்து சம்பளம் வழங்குவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இந்த காலத்தில் தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்கவோ, வீட்டை காலிசெய்யவோ கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே உள்பட பலர் இந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவு வழங்குவதாக அறிவித்துள்ளனர். ரெயில்வே நிர்வாகம் உணவு பொருட்களுடன் சிறப்பு ரெயில் விடுவதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6 பேர் இறந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,041 ஆகவும், பலி எண்ணிக்கை 26 ஆகவும் உயர்ந்துள்ளது. 99 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதிய நோயாளிகளை பொறுத்தவரையில் நொய்டாவை சேர்ந்த ஸ்பைஸ்ஜெட் விமானியும் ஒருவர். இவர் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு செல்லவில்லை. பீகார், மராட்டியம் போன்ற மாநிலங்களிலும் புதிய நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

dailythanthi