கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் நேரடியாக களத்தில் இறங்கியுள்ள மம்தா பானர்ஜி, மக்களை கவர்ந்து வருகிறார்.
கொல்கத்தா: இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் போல், மேற்கு வங்காளத்திலும் கொரோனா வைரஸ் தடம் பதித்தபோதிலும், 26 பேருக்கு பாதிப்பு, 3 பேர் உயிரிழப்பு என்ற அளவில் நிற்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேரடியாக களம் இறங்கி உள்ளார்.
அவர் மக்கள் நெரிசல் மிகுந்த மார்க்கெட் பகுதியில் காரை விட்டு இறங்கி நடந்து செல்கிறார். அதிக அளவில் கூட வேண்டாம் என்று மக்களை அன்பாக எச்சரிக்கிறார். தரையில் கீழே கிடக்கும் உடைந்த செங்கல்லை அவரே எடுத்து, தன்னைச்சுற்றி ஒரு வட்டம் போடுகிறார். ஒரு மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து வட்டங்களை போடுகிறார்.
கையில் பட்ட கறையை தனது வெள்ளை புடவையில் துடைத்துக் கொள்கிறார். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, ஓரிரண்டு வார்த்தைகள் பேசுகிறார். அவர் மீது மக்கள் கோபம் கொள்வதில்லை. அவரது கருத்தை புரிந்து கொண்டு, அவர் போட்ட வட்டங்களில் நின்று கொண்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க தயாராகிறார்கள்.
அந்த இடத்தில் வேலையை முடித்துக்கொண்டு, ஆஸ்பத்திரிகளுக்கு விரைவுகிறார், மம்தா பானர்ஜி. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை விவரங்களை கேட்டறிகிறார்.
டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் சிறிது நேரம் உரையாடுகிறார். ஏழைகளுக்கு உணவு வினியோகிக்கிறார்.
மற்ற மாநிலங்களைப் போல், மேற்கு வங்காளத்திலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் அத்துமீறி வருகிறார்கள். அப்படி செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு மம்தா எச்சரிக்கை விடுக்கிறார். சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது முக்கியம் என்றாலும், மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். மேலும், தங்கள் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் நோயாளிகளை அடையாளம் கண்டறிந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறார்.
குறிப்பிட்ட மதத்தினரை ‘தாஜா’ செய்பவர் என்ற கண்டனக்கணை அவர் மீது வீசப்படுவது வழக்கம். இருந்தாலும், அவரது அணுகு முறையால், எல்லா மத வழிபாட்டுத்தலங்களிலும் கூட்டம் சேராமல் பார்த்துக் கொண்டுள்ளார்.
இதுதவிர, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவையும் மம்தாவின் நிகழ்ச்சி நிரலில் உண்டு.
மம்தாவின் எளிய அணுகுமுறைகள் மக்களை கவர்ந்து வருகின்றன. எதிர்க்கட்சிகளும் அவர் களத்தில் முன்னால் நின்று பணியாற்றுவதாக பாராட்டு தெரிவித்து வருகின்றன. பல ஆண்டுகளாக, மம்தாவின் பரம எதிரியாக திகழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பாராட்டுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மம்தாவுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் பா.ஜனதாவில் ஒரு சாரார் புகழாரம் சூட்டுகிறார்கள்.
அதே சமயத்தில், பா.ஜனதாவில் மற்றொரு சாரார், மம்தா பானர்ஜிக்கு சேவை நோக்கத்தை விட விளம்பர மோகம்தான் பெரிதாக இருப்பதாக விமர்சிக்கிறார்கள்.
மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதையொட்டி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. பிரசாந்த் கிஷோர் யோசனைப்படி, ‘தீதியிடம் சொல்லுங்கள்’, ‘வங்காளத்தின் கவுரவம் மம்தா’ என்ற 2 பிரசார திட்டங்கள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
அத்துடன், மம்தாவின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள், சட்டசபை தேர்தலில் தங்களுக்கு நல்ல பலனை அளிக்கும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஒருபுறம் பூங்கொத்து; மற்றொரு புறம் கற்கள். எதை வீசினாலும் கவலைப்படாமல், சாலையில் இறங்கி மக்களுடன் கலந்து வருகிறார், மம்தா. மக்களின் மனங்களை வெல்வதற்கும், அரசியல் சதுரங்கத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்கும் அவர் இறங்கி அடித்து வருகிறார்.
maalaimalar