கொரோனாவை ஒழிக்குமா கோடை வெயில் ; இன்று துவக்கம்

சென்னை : ‘இந்த ஆண்டுக்கான கோடை காலம், இன்று துவங்குகிறது. இயல்பான நிலையை விட, ஒரு டிகிரி செல்ஷியஸ் வெயில் அதிகரிக்கும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்கள், பெரும்பாலான மாநிலங்களில், கோடை காலமாக கருதப்படுகிறது. தமிழகத்தில், மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாகவும், ஜூன் முதல், தென்மேற்கு பருவமழை காலமாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோடை காலம், இன்று துவங்கி, மூன்று மாதம் நீடிக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையம் கூறியுள்ளதாவது: பெரும்பாலான மாநிலங்களில், தற்போதைய வெப்ப நிலையை விட, ஒரு டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகும். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில், மற்ற மாநிலங்களை விட, வெயில் அதிகமாக இருக்கும். தமிழகத்தில், வழக்கமான கோடை வெயில் நிலவும். சில நேரங்களில், அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ், தற்போது, மனிதர்களின் உடல் வெப்ப நிலை, 90 டிகிரி பாரன்ஹீட் அளவில் பரவுகிறது. கோடை வெயில் அதிகரித்தால், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகும்; தற்போது வெப்பம் அதிகரிக்கும் இடங்களில் கொரோனா பரவாது என கூறப்படுகிறது. அப்போது, கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் குறையலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

dinamalar