பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்… விழிப்புடன் இருங்கள்!

சர்வதேச நாடுகளில், ‘கோவிட் – 19’ என்ற, கொரோனா வைரஸ், ஏராளமான உயிர்களை காவு வாங்கி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கிறது.

அணுவினும் சிறிய, இவ்வைரசை பணத்தால், மருந்தால், மதியால், இதுவரை வெல்ல முடியவில்லை. இதன் ருத்ரதாண்டவம், 170க்கும் மேற்பட்ட நாடுகளில், போரினும் கொடிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. கற்பனை செய்ய முடியாத வேகத்தில் பாதிப்பு எண்ணிக்கை கூடுகிறது. கொத்து கொத்தாய் மரணங்கள் நிகழ்வதால், உலகமே, உச்சக்கட்ட பீதியில் உறைந்துள்ளது.

இக்கட்டான சூழலை சமாளிக்க, அனைத்து நாடுகளையும், உலக சுகாதார நிறுவனம் கைப்பிடித்து வழி நடத்துகிறது. நம் நாட்டிலும், கொரோனா பாதிப்பு வேகம் எடுத்துள்ளது. இந்நேரத்தில், பிற நாடுகளில் நடந்த தவறுகளை, அரசோ, நாமோ செய்து விடக் கூடாது.

கொரோனா சமூக பரவலாக, ஒரு தனி மனிதனின் அஜாக்கிரதை போதுமானது. தமிழக மக்களுக்கு, இன்னும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது அவசியம். வீட்டில் இருக்கும் உங்களுக்கு, உலக சுகாதார நிறுவனம் தரும் இத்தகவல்கள் இன்றியமையாதவை; படித்து விழியுங்கள்.

அதிகாரப்பூர்வ தகவல்களை கவனிங்க!

கொரோனா கொலை வெறி நடத்தி வரும் இக்காலம், மக்களுக்கு சோகம், மனஅழுத்தம், குழப்பம், வீண் கோபம், இயலாமை அதிகரிப்பு என, நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி விட்டது. இதிலிருந்து விடுபட, நமக்கு நெருங்கிய நம்பிக்கையான மனிதர்களிடம் மனம் விட்டு பேசலாம் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம். நீண்ட நேரம் முடங்கி கிடக்காமல், சிறிது நேரம் சமூக ஊடகங்களில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் உரையாடலாம்

இக்காலத்தில், நீங்கள் கண்டிப்பாக உங்கள் வீடுகளிலேயே, தங்கி இருக்க வேண்டும். கொரோனாவை எதிர்த்து போராட உடம்பு சிறப்பாக செயல்பட வேண்டும். இதற்கு போதுமான நோய் எதிர்ப்பு சக்தி தேவை. அதிகமான பழங்கள், காய்கறிகள் அடங்கிய உணவுகளை உட்கொள்ளுங்கள். உடற்பயிற்சியை தடையின்றி தொடர வேண்டும்.

மன அழுத்தத்திற்கு புகைப்பதும், மது அருந்துவதும் தான் தீர்வு என்று கருதினால், ஆபத்தை சந்திப்பீர்கள். அவை இன்னும், உங்கள் மன அழுத்தத்தை அதிகப்படுத்தும். இதற்கு அலைபேசி மூலம் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெறலாம். உடல், மன ரீதியான பயிற்சி அவசியம்.

சர்வதேச அளவில் நெருக்கடியான நிலை உருவாகும் போது, வதந்திகளும் கட்டுக்கடங்காமல் பரவும். அதிலும், சமூக வலைதளங்களில் சொல்லவே வேண்டாம். வதந்திகள் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும். எனவே, கொரோனா பற்றியும் அதன் பாதிப்பு குறித்தும் சரியான தகவல்களை அறிவது முக்கியம்.

வதந்திகளை நம்பாமல், பத்திரிகைகளில் வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும், கருத்தில் கொள்ளுங்கள். உலக சுகாதார நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனங்களுடன் இணைந்திருக்கலாம் என, உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இது தான் கொரோனா குடும்பம்

ரஸ்தாலி, பூவன், மொரீஸ், கற்பூர வள்ளி, செவ்வாழை என, வாழையில் பல வகைகள் உள்ளன. அதேபோன்று, கொரோனா என்பது ஒரு வைரஸ் குடும்பம். இக்குடும்பத்தில் பிறந்த வைரஸ் வகைகள் பல.

தற்போது புதிதாக தோன்றியிருப்பது தான், கோவிட் – 19. இதற்கு முன் இக்குடும்பத்தில் பிறந்த வைரஸ்களில், ‘சார்ஸ் – கோவ் (SARS-COV), மெர்ஸ் – கோவ் (MERS-COV)’ வைரஸ்களும் மனிதனுக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தியவை.

கோவிட்-19: இவ்வைரஸ், 2019 டிசம்பர், இறுதியில், சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றி, பூமியை பந்தாடி வருகிறது. கொரோனா குடும்பத்தில் தோன்றிய கொடூர வைரஸ் இது. உலக அளவில் அதிகம் உயிரை பலி கொண்ட பட்டியலில், 2வது இடத்தில் உள்ளது. விரைவில், முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. கொரோனா குடும்பத்தில், புதிதாக தோன்றி இருப்பதால் நோவல், அதாவது, நுாதனமான, கோரோனா வைரஸ் என, அழைக்கின்றனர்.

‘சார்ஸ்’ வைரஸ் போன்று, கோவிட்-19, சுவாச கோளாறை ஏற்படுத்துவதால், ‘சார்ஸ் – 2’ என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். ஆனால், சார்ஸை விட மின்னல் வேகத்தில் பரவும் தன்மை உடையதாகவும், கொடியதாகவும் விளங்குகிறது. இந்த கொலைவெறி வைரஸ், சீனாவில் தோன்றியதால், அந்நாட்டுக்கு எரிச்சலுாட்டும் வகையில், கோவிட்-19ஐ, ‘சீன வைரஸ்’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டலாக குறிப்பிடுவதை வழக்கத்தில் வைத்துள்ளார்.

சார்ஸ் – கோவ்: இதன் பிறப்பிடமும் சீனா தான். அந்நாட்டின் தெற்கு பகுதியில், 2002ல் தோன்றியது. 2003ல், 26 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. 8,௦௦௦ பேர் வரை இறந்தனர். இது, தீவிர சுவாசக்கோளாறு பிரச்னையை ஏற்படுத்தி, மரண பயத்தை காட்டும். 2003க்கு பிறகு பெரிய அளவில் தென்படவில்லை. கோவிட் – 19 பற்றிய பெரும்பாலான ஆராய்ச்சிகள், சார்ஸ் வைரஸை மையப்படுத்தி தான் நடக்கின்றன. இது, பூனையிடம் இருந்து மனிதனுக்கு தொற்றியது.

மெர்ஸ் – கோவ்: மத்திய, கிழக்கு நாடுகளில் பாதிப்பை விளைவித்த வைரஸ் இது. கோவிட் – 19, சார்ஸ் போன்று கொடுமையானதாக இல்லாவிட்டாலும், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. 2012ல், சவுதி அரேபியாவில் தோன்றியது. அங்கிருந்து, கத்தார், எகிப்து, துருக்கி, பிரிட்டன், வங்கதேசம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. துவக்க காலத்தில், சவுதி வைரஸ் என்றும் இதை அழைத்தனர். இது, ஒட்டகத்திடம் இருந்து மனிதனுக்கு தொற்றியது.

குழந்தைகளை கவனிங்க…

இக்கால கட்டத்தில் குழந்தைகளும் மன ரீதியான பாதிப்புகளை சந்திக்கலாம். அவர்கள் எபபோதுமே, பெரியவர்களின் அன்பை எதிர்பார்ப்பவர்கள். அவர்களிடம் முன்பை விட கூடுதல் அன்பு, கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகளை தனிமைப்படுத்தக் கூடாது. அவர்கள் பேசுவதை கனிவோடு கேட்க வேண்டும். கோபப்படாமல் கையாள வேண்டும். முடிந்தால் அவர்களுடன் விளையாட வேண்டும். இது, உங்கள் கவலையையும் போக்கும்.

தற்போது நடந்து கொண்டிருப்பவற்றை உண்மை தன்மையோடு எடுத்துரைக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை, அவர்களின் வயதிற்கு ஏற்ப, புரியும் வகையில் விளக்க வேண்டும்.

இன்னும் ஜாக்கிரதை தேவை

கொரோனா வைரஸ் வயது வேறுபாடு இன்றி, அனைவரையும் தாக்கும் தன்மை உடையது. எனவே, குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருமே மெத்தனத்தை மூட்டை கட்ட வேண்டும்.

இறப்பு விகிதத்தை கணக்கிடும் போது, 60 வயதை கடந்த முதியவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நீங்கள் முதியவர் என்றால், உங்களை தனிமைப்படுத்துவது முக்கியம்.

சில தொற்றா நோய்களால் அவதிப்படுவோரும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ரத்தக்கொதிப்பு, இருதய நோய், பக்கவாதம், புற்றுநோய், சர்க்கரை நோய் மற்றும் நாள்பட்ட சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தொற்றா நோயாளிகளுக்கு, ‘டிப்ஸ்’

எக்காரணத்திற்காகவும், நீங்கள் எடுக்கும் மருந்துகளை நிறுத்தக் கூடாது. மருத்துவரின் ஆலோசனையை கடைபிடிக்க வேண்டும்.

ஒரு மாதம் அல்லது அதற்கும் கூடுதலான காலத்திற்கு தேவைப்படும், மருந்து, மாத்திரைகளை கைவசம் வைத்திருக்க வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்களிடம் இருந்து கண்டிப்பாக, ஒரு மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மனம், உடல் நலனை பேண வேண்டும்.

கொரோனாவின் காலம்

கொரோனா எந்த பொருட்களில், எவ்வளவு நேரம் இருக்கும் என்பது புதிராக உள்ளது. இதுபற்றி, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியான, ஆராய்ச்சி கட்டுரையை, ஜான் ஹாக்கின்ஸ் பல்கலை கொரோனா ஆராய்ச்சி குழு வெளியிட்டுள்ளது. காற்றிலும், 3 மணி நேரம் இதனால் மிதக்க முடியும் என்பது அதிர்ச்சி தகவல்.

பிளாஸ்டிக் – 72 மணி நேரம்

எஃகு பொருட்கள் – 48 மணி நேரம்

அட்டைகள் – 24 மணி நேரம்

தாமிரம் – 4 மணி நேரம்

காற்று – 3 மணி நேரம்

கை கழுவினால் போதுமா

நாமெல்லாம் ஊரடங்கில் உள்ளோம். அத்தியாவசிய தேவைக்கு வெளியில் சென்று, வீடு திரும்பும் போது, கட்டாயம் கைகளை சோப்பை பயன்படுத்தி, 20 நொடிகள் கழுவ வேண்டும். ஆனால், இது மட்டும் போதாது. முன்னதாக, வீட்டிற்குள் வரும் போது, கதவு கைப்பிடியை நிச்சயம் பிடிப்போம். ஒருவேளை நம் கையில் கொரோனா வைரஸ் இருந்தால், அதில் தங்கிவிடும். குறிப்பிட்ட நேரத்திற்குள் இன்னொருவர் அந்த கைப்பிடியை பிடித்தால், அவருக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே, நாம் அடிக்கடி தொடும் கதவு கைப்பிடி, மேஜை, நாற்காலி, சுவிட்ச், அலைபேசி, தொலைபேசி, கணினி கீ போர்டு, கழிப்பறை, பக்கெட், குழாய் மற்றும் வீடுகளை அவ்வப்போது, கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும், என்கின்றனர் உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள்.

dinamalar