பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்

கொரோனாவால் வந்த இருளை அகற்றும் வகையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் நேற்று இரவு 9 மணிக்கு மக்கள் வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்திகளை ஏற்றினார்கள்.

சென்னை,  உலக நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமலில் இருந்து வருகிறது.

இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அவ்வப்போது, பிரதமர் மோடி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி நாட்டு மக்கள் அனைவரும் கைதட்டி பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அதன்படி, அன்று மாலை நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இந்தியாவின் இந்த நடைமுறையை கொரோனாவுக்கு எதிராக போராடி கொண்டிருந்த பல நாடுகளும் கடைபிடிக்க தொடங்கின.

இந்தநிலையில், கடந்த 3-ந் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி வேண்டுகோள் ஒன்றை விடுத்து இருந்தார்.

அப்போது, கொரோனாவால் வந்த இருள் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக ஒளியின் வலிமையை நாம் நான்கு திசைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், எனவே வருகிற 5-ந் தேதி (நேற்று) இரவு 9 மணிக்கு அனைவரும் வீடுகளில் எரியும் மின் விளக்குகளை அணைத்து விட்டு வாசலில் நின்றோ, அல்லது பால்கனியில் நின்றோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச்லைட் அல்லது செல்போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நிற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று, நாட்டு மக்கள் அனைவரும் விளக்கு ஏற்றுவதற்கு தயாரானார்கள். அதன்படி, நேற்று இரவு சரியாக 9 மணிக்கு நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் எரிந்த மின் விளக்குகளை அணைத்துவிட்டு, வாசல்களில் மெழுகுவர்த்தி மற்றும் அகல் விளக்கு களை ஏற்றினார்கள். பலர் டார்ச்லைட் மற்றும் செல்போன் டார்ச்லைட்டை ஒளிரச் செய்தனர். பலர் பால்கனியில் நின்றபடி டார்ச்லைட், செல்போன் டார்ச்லைட்டை ஒளிரச் செய்தனர்.

இதனால் இருளுக்கு மத்தியில் எங்கும் விளக்குகள் ஒளிர்ந்ததை காண முடிந்தது. கொரோனாவை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி 9 நிமிடங்களுக்கும் மேலாக நின்றனர்.

மோடி குத்துவிளக்கு ஏற்றினார்

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தீபம் ஏற்றினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், குடும்பத்தினருடன் விளக்குகளில் ஒளி ஏற்றினார்.

பிரதமர் மோடி தனது இல்லத்தில் பெரிய குத்துவிளக்கை ஏற்றி ஒளிரச் செய்தார்

உள்துறை மந்திரி அமித்ஷா தனது இல்லத்தின் முன்பு விளக்கு ஏற்றினார். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் வீட்டின் முன்பு விளக்குகளை ஏற்றினார். தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தனது வீட்டின் முன்பு மெழுகுவர்த்தியை ஏந்தியபடி நின்றார்.

இதேபோல் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் வீடுகளின் முன்பு விளக்குகளை ஏற்றினார்கள்.

கொரோனாவை விரட்ட தமிழக மக்கள் ஓரணியில் நின்று தங்கள் ஒற்றுமையை பறைசாற்றினார்கள். சென்னை, மதுரை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, நெல்லை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மக்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு ஒளிரும் அகல்விளக்கு, மெழுகுவர்த்திகளை ஏந்தி நின்றனர்.

இளைஞர்கள் டார்ச் லைட்டுகள் மற்றும் செல்போன்களில் உள்ள டார்ச்லைட்டுகளை ஒளிரச் செய்தனர்.

இது கொரோனாவை ஒழிப்பதில் தமிழக மக்களுக்கு உள்ள ஆர்வத்தையும் ஒற்றுமையையும் காட்டுவதாக அமைந்தது.

இரவிலும் பரபரப்பாக இயங்கும் சென்னை நகரம், ஊரடங்கின் காரணமாக கடந்த சில நாட்களாக பகலில் கூட வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று இரவு 9 மணி அளவில் நகரில் வீடுகளில் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் திடீரென்று மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டதால் நகரம் இருளில் மூழ்கியது போல் காணப்பட்டாலும், மக்கள் விளக்குகளை ஏற்றியதால் எங்கும் ஒளிவெள்ளம் பாய்ந்தது.

புரசைவாக்கம், எழும்பூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, அடையாறு, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வடபழனி, அண்ணாநகர், வளசரவாக்கம், வேளச்சேரி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் வீடுகளில் மக்கள் விளக்குகளை ஏற்றினார்கள். சிறுவர்-சிறுமிகள் ஆர்வத்துடன் கைகளில் விளக்குகளை ஏந்தியபடி நின்றனர். சிலர் தங்கள் வீட்டு வாசலில் குத்துவிளக்குகளை ஏற்றி வைத்து இருந்தனர்.

அடுக்குமாடிகளில் வசிப்பவர்கள் பால்கனியில் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி நின்றனர். சில இடங்களில் இந்திய வரைபடம் போன்று விளக்குகளை ஏற்றி வைத்து இருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி

கவர்னர் பன்வாரிலால் புரோகித் கவர்னர் மாளிகையில் விளக்கு ஏற்றினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சமூக இடைவெளி விட்டு மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி நின்றார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தனது குடும்பத்தினருடன் வீட்டில் விளக்குகளை ஏற்றினார். சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும் வீட்டு வாசலில் குடும்பத்தினருடன் தீபம் ஏற்றினார். இதேபோல் மற்ற அமைச்சர்களும் தங்கள் இல்லங்களில் விளக்கு ஏற்றினார்கள்.

ரஜினிகாந்த்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் வாசலின் முன்பு மெழுகுவர்த்தியை ஏந்தியபடி வந்து நின்றார். இரவு 8.50 மணிக்கே அவரது இல்லத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. போயஸ் கார்டன் பகுதி முழுவதுமே பெரும்பாலான இடங்களில் மத்தாப்பு, புஸ்வாணங்கள் கொளுத்தப்பட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. குழந்தைகள் கொரோனா வைரஸ் ஒழிக என்று கோஷமிட்டதையும் காண முடிந்தது.

இதைப்போல பெருந்தலை வர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், வி.ஜி.பி. சந்தோசம் உள்ளிட்டோரும் தங்கள் வீடுகளில் ஒளியேற்றி ஆதரவு தெரிவித்தனர்.

பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசாரும் தங்களின் கைகளில் உள்ள செல்போன் டார்ச் விளக்குகளை எரிய விட்டிருந்ததை காண முடிந்தது. மொத்தத்தில் சென்னை நகரமே இருளில், விளக்குகளால் ஜொலித்தது.

கொரோனாவை ஒழிக்க உறுதி கொள்ளும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் காட்டிய இந்த ஒற்றுமை, உலக நாடுகளுக்கு இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், வலிமையையும் காட்டுவதாக அமைந்தது.

dailythanthi