இலங்கைக்கு 10 டன் அத்தியாவசிய மருந்துகள்- இந்தியா பரிசாக அளித்தது

இலங்கைக்கு கொண்டு செல்ல மருந்துகள் விமானத்தில் ஏற்றப்பட்ட காட்சி

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில், இலங்கைக்கு 10 டன் எடையுள்ள அத்தியாவசிய மருந்துகளை இந்தியா பரிசாக அளித்தது.

கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 180 ஆக உள்ளது. 6 பேர் பலியாகி உள்ளனர். இருப்பினும், இம்மாத இறுதிக்குள் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று இலங்கை சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2 ஆயிரத்து 500 வரை உயரும் என்று தெரிகிறது.

இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும்வகையில், உயிர் காக்கும் மருந்துகளை வழங்குமாறு இந்தியாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டது. அதை ஏற்று, இலங்கைக்கு இந்தியா 10 டன் எடையுள்ள உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளை பரிசாக அளித்துள்ளது.

இந்த மருந்துகளை ஏற்றிக்கொண்டு, ஏர் இந்தியா சிறப்பு விமானம் நேற்று கொழும்பு விமான நிலையத்தில் தரை இறங்கியது.

இதுகுறித்து கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கை, இந்தியாவின் மதிப்புமிக்க கூட்டாளி. சிக்கலான நேரத்தில் இலங்கைக்கு துணை நிற்கும் இந்தியாவின் மற்றொரு செயல்பாடு இதுவாகும்.

உள்நாட்டிலேயே இந்தியா சவால்களை சந்தித்துவரும் நிலையில், தனது வளங்களையும், நிபுணத்துவத்தையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் இந்தியா ஆர்வமாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், இலங்கைக்குள் நுழைய எல்லா வெளிநாட்டினருக்கும் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது.

malaimalar