உயிர்த் தியாகத்துக்கு உரிய மரியாதை செலுத்துமா மத்திய, மாநில அரசுகள்?

அபாயகரமான, ‘கொரோனா’ வைரஸ் தொற்று, மிக வேகமாக பரவி வரும் இக்கால கட்டத்தில், மக்களை காக்கும் மகத்தான சேவையில் ஈடுபட்டிருக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள், துாய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், அரசுத் துறை உயரதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், கடவுளுக்கு நிகரானவர்கள்.

தமிழக முதல்வர் முதல், அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர் வரை, தங்களது குடும்பத்தாரை விட்டு, களத்தில் இறங்கி, காலம் நேரம் பாராமல் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர். தமிழகம், இதுவரை கண்டிராத வகையில், முதல்வரிடம் இருந்து தினசரி ஓர் அறிவிப்பு வெளியாகிக் கொண்டிருக்கிறது.

நிலைமை இவ்வாறிருக்க, சென்னை, அம்பத்துாரில், உயிரிழந்த டாக்டர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய, அங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்திய செயல், கடுமையான கண்டனத்துக்குரியது. இவ்வளவு மோசமான செயல், தமிழகத்தில் நடக்குமென, யாருமே எதிர்பார்க்கவில்லை; இது, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் அவமானம்.

அரசு சார்பில் மரியாதை:

கொரோனா தொற்றுக்கு பயந்து, டாக்டர்கள் விடுமுறையில் சென்று விட்டாலோ அல்லது அரசாங்க பணியே எங்களுக்கு வேண்டாம் என, ராஜினாமா செய்துவிட்டு போனாலோ, யாரால் தடுக்க இயலும்; எந்த சட்டத்தால் தடுக்க முடியும்? ஏற்கனவே, இங்கிலாந்தில் கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த, இந்திய டாக்டர்கள் நால்வர், வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருக்கின்றனர்.

அதுபோன்ற உயிரிழப்புகள் இங்கு எவ்வளவு நிகழுமோ, என்னென்ன நேருமோ என, யாருக்கும் தெரியாது. வைரஸ் தொற்று ஏற்பட்டால் மரணித்து விடுவோம் எனத் தெரிந்திருந்தும், டாக்டர்கள் ஆற்றும் கடமை, தியாகம் அளப்பரியது.

தங்களது இன்னுயிரை பணயம் வைத்து, மக்களின் நலனுக்காக, இந்த சமூகத்தை காப்பாற்றுவதற்காக பகலிரவாக பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த தியாகச் செம்மல்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன? மருத்துவத் துறையினர் அனைவரும் பத்திரமாக, பாதுகாப்பாக பணிபுரிவதற்கான சூழலை, நம்பிக்கையை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஒருவேளை, துரதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் தியாகத்துக்கு, உரிய மரியாதையை மத்திய, மாநில அரசுகள் அளிக்க வேண்டும். தேசத்தை காத்திடும் பாதுகாப்பு படையினரின் உயிர் தியாகத்துக்கு, உரிய மரியாதையை அரசு சார்பில் அளிப்பது போன்று, டாக்டர்களின் தியாகத்துக்கும் மரியாதை அளிக்கப்பட வேண்டும்.

கலெக்டர், எஸ்.பி., அல்லது மாநகராட்சி கமிஷனர், மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரில், ஒருவர் தலைமையில் இறுதி மரியாதை, தகுந்த பாதுகாப்புடன் அளிக்கப்பட வேண்டும். அரசு சார்பில், அமைச்சர் மரியாதை செலுத்த வேண்டும்.

தியாகத்துக்கு விருது:

உயிர்நீத்த டாக்டரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதுடன், தகுதி அடிப்படையில் மருத்துவம் படிக்க, அரசு உதவ வேண்டும். பிளஸ் 2 அல்லது ‘நீட்’ மதிப்பெண்களுடன், கூடுதல் மதிப்பெண் அளிக்க வேண்டும். உயிர்நீத்தோரின் தியாகத்துக்கு அளிக்கும் கவுரவம் இது. மிகவும் நெருக்கடியான, இந்த நோய் தொற்று காலக்கட்டத்தில், மருத்துவச் சேவையாற்றி வரும் டாக்டர்களின் தியாகத்தை, வெறும் நிதியை வழங்கி மட்டுமே, அரசு ஈடுகட்டிவிட இயலாது.

எனினும், டாக்டர்களுக்கு, 50 லட்சம் ரூபாய், மருத்துவ ஊழியர்களுக்கு, 30 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும் வகையில், அரசு சார்பில் இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும். டாக்டர்களின் உயிர்த்தியாகத்தை கவுரவிக்கும் வகையில், விருதுகளையும் வழங்க வேண்டும்; அது, இந்த தேசத்தை பாதுகாத்திடும், பாதுகாப்பு படையினரின் தியாகத்துக்கு அளித்திடும் கவுரவத்துக்கு நிகரானதாக இருக்க வேண்டும்.

அது தான், அவர்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்பெறும் மிகப்பெரிய ஆறுதல். அப்போது தான், இந்த தேசத்துக்காக சேவையாற்ற பலரும் முன் வருவர். தங்களின் இன்னுயிரை துச்சமென நினைத்து, பிறந்த நாட்டிற்காக சேவையாற்ற வேண்டுமென்ற கடமை உணர்வு மேலோங்கும்; இவற்றை செய்யுமா மத்திய, மாநில அரசுகள்?
– ல.ஆதிமூலம்
வெளியீட்டாளர், தினமலர், கோவை