‘கொரோனா’ தடுப்பு நடவடிக்கைகள்: இந்தியாவுக்கு ஐ.எம்.எப்., பாராட்டு

வாஷிங்டன்: இந்தியாவில், கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கு, சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து, சர்வதேச நிதியத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய இயக்குனர், யாங் ரீ, கூறியதாவது:இந்தியா, பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள முயற்சித்து வந்த நிலையில், கொரோனாவால் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. இந்தியா, இதில் இருந்து எப்போது மீளும் என்பதை உறுதியாக கூற முடியாது. அதேசமயம், பொருளாதார மந்தநிலையிலும், கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்திய மத்திய அரசின் முடிவிற்கு, சர்வதேச நிதியம் ஆதரவளிக்கிறது.

பொருளாதா வளர்ச்சி

கடந்த,60 ஆண்டுகளில், ஆசிய பிராந்தியம், பூஜ்ய வளர்ச்சியை கண்டதில்லை. அந்த வகையில், பிற பிராந்தியங்களை விட, ஆசியா சிறப்பாகவே உள்ளது. எனினும், நடப்பாண்டு வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாது.கொரோனா தொற்றை சமாளித்ததில் முதல் நாடாக சீனா உள்ளதால், இந்தாண்டு இறுதியில், அங்கே பொருளாதாரம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கலாம். இருந்தபோதிலும், வைரஸ் திரும்பவும் பரவத் துவங்கியுள்ளதால், இயல்பு நிலை திரும்ப நாளாகும்.நடப்பாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 1.9 சதவீதமாக குறையும். சீனா, 1.2 சதவீதம், ஜப்பான், 5.2 சதவீதம், தென்கொரியா, மைனஸ் 1.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி இருக்கும். ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகள், ஆரோக்கிய பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்கான நிதி பற்றாக்குறை ஏற்பட்டால், இதர செலவுகளை குறைக்க வேண்டும். சர்வதேச நிதி நெருக்கடியின் போது, மக்கள் சேமிப்பிற்கு பாதுகாப்பின்மை, வேலையில்லா திண்டாட்டம், தொழிற்சாலைகள் மூடல் போன்ற பிரச்னைகளை தான், இதுவரை உலகம் சந்தித்தது.

வேலைவாய்ப்பு

இப்போது, இத்தகைய பிரச்னைகளுடன், மக்களின் ஆரோக்கிய பாதுகாப்பும் சேர்ந்திருப்பது, சர்வதேச நாடுகளை பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.ஆசிய-பசிபிக் நாடுகள், அன்னிய முதலீடுகளை ஈர்க்கவும், குறு, சிறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தேவையான கொள்கை திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அவற்றால் ஏற்படும் பயன்கள், சாமானிய மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.ரூ.70 லட்சம் கோடி நிதியுதவிகொரோனா தாக்கத்தால், சர்வதேச உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 3 சதவீதம் பின்னடைவை காணும்; தனி நபர் வருவாய் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நிதியத்தின், 189 உறுப்பு நாடுகளில், 102 நாடுகள், நிதியுதவி கோரியுள்ளன. அவற்றுக்கு, பன்னாட்டு நிதியத்தின் மொத்த வரம்புத் தொகையான, 70 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்.- கிறிஸ்டினா ஜியார்ஜிவா, தலைவர், சர்வதேச நிதியம்.

உலக சுகாதார அமைப்பு வரவேற்பு

இந்தியா, உலக வர்த்தக அமைப்புடன் இணைந்து, கொரோனா பரவல் தடுப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்தகைய கூட்டு முயற்சி, கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான போரில், வெற்றி காண துணை புரியும். போலியோவுக்கு எதிரான போரில், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வெற்றி கண்ட இந்தியா, கொரோனா பரவலை தடுக்கவும், மிகச் சிறந்த வழிமுறைகளை கையாண்டு வருவது பாராட்டுக்குரியது. இதற்காக, உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வரும், மத்திய சுகாதார துறை அமைச்சர், ஹர்ஷ்வர்த்தனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.-டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தலைவர், உலக சுகாதார அமைப்பு.

தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி

உலகம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்ப ஒரே வழி, தடுப்பூசி கண்டுபிடிப்பது தான். அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்படுவர்.

-அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா., பொதுச் செயலர்.

dinamalar