ஊரடங்கால் விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க உத்தரவு

விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்கள்

ஊரடங்கு காலத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு டிக்கெட் கட்டணத்தையும் திருப்பி செலுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் முதற்கட்டமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து முடங்கியது.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டிய நிலை விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டது.

ஆனால், விமான முன்பதிவுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படாது விமான நிறுவனங்கள் அறிவித்தன. முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணத்தை எதிர்கால பயணங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறிவிட்டது.

விமான நிறுவனங்களின் இந்த அறிவிப்பால், விமான பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பாக பலர் சமூக வலைத்தங்களில் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

இந்த நிலையில் முதற்கட்ட ஊரடங்கு காலத்தின்போது (மார்ச் 25 முதல் ஏப்ரல் 14  வரை) முன்பதிவு செய்திருந்த பயணிகள் டிக்கெட் கட்டணங்களை திருப்பி அளிக்குமாறு கேட்கும் பட்சத்தில், ரத்துக் கட்டணம் எதுவும் இன்றி முழுமையாக விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு திருப்பி அளிக்க வேண்டும் விமான போக்குவரத்து துறை கூறி உள்ளது.

மே 3ம் வரையிலான பயணங்களுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு, ரத்து கட்டணம் எதுவும் பிடிக்காமல் முழு தொகையும் திருப்பி செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

malaimalar