தமிழகத்தில் கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை- மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்தநிலையில் கொரோனாவுக்கு எதிராக பிளாஸ்மா தெரபி முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி குணம் அடைந்தவரின் உடலில் வைரஸ் தொற்றை போராடி அழிக்கும் எதிர்அணுக்கள் (பிளாஸ்மா) உருவாகும். இந்த அணுக்களை எடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செலுத்தும் போதுஅவர்களது உடம்பில் உள்ள வைரஸ் தொற்றை அழிக்க முடியும்.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபரும் குணம் அடைவார். இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களின் உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்படும். அந்த ரத்தத்தில் பிளாஸ்மா மட்டும் பிரித்து எடுக்கப்படும்.

ஒரு தகுதி வாய்ந்த, குணம் அடைந்த நோயாளி உடலில் இருந்து எடுக்கப்படும். பிளாஸ்மா மூலம் 4 நோயாளிகளுக்கு செலுத்த முடியும்.

இந்த பிளாஸ்மா சிகிச்சையை அளிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.சி.எம்.ஆர். இடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியை கேட்டு தமிழக அரசு, மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்து இருந்தது.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா முறை சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவ கல்வி பொறுப்பு இயக்குனர் நாராயணபாபு கூறும்போது, “கொரோனாவுக்கு எதிரான பிளாஸ்மா முறை சிகிச்சைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த 2 வாரங்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கும்.

இதற்காக குணம் அடைந்து வீடு திரும்பியவர்களிடம் பேசி வருகிறோம். அவர்கள் அனுமதி அளித்தால் அவர்களிடமிருந்து பிளாஸ்மா எடுக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

malaimalar