கொரோனாவை பயன்படுத்தி இந்திய பெருநிறுவனங்களை வாங்க முயற்சிக்கும் சீனா – அதிரடி கட்டுப்பாடுகள் விதித்த மத்திய அரசு

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்பு

கொரோனாவை பயன்படுத்தி இந்திய பெருநிறுவனங்களின் பங்குகளை சீனா வாங்கி வந்த நிலையில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

புதுடெல்லி: கொரோனா அச்சுருத்தல் காராணமாக பங்குச்சந்தையில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மதிப்பு அனைத்தும் வேகமாக சரிந்து வருகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றன.

குறிப்பாக சீனாவின் மத்திய வங்கி கடந்த மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் 1.01 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கை இந்திய பெரு நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனாவை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சிப்பதாகவும் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், இந்திய நிறுவனங்களின் பங்குகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யவேண்டும் என்றால் மத்திய அரசிடம் அனுமதி கேட்கவேண்டும் என்ற நடைமுறை புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவை குறிவைத்து அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறையின் படி இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்துள்ள நாடுகள் இந்திய நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

அந்நிய முதலீட்டு நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திருத்தம் வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக சீனா இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து பங்குகளை வாங்கி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைத்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தான் விடுத்த எச்சரிக்கையையடுத்து இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களை கட்டுப்படுத்தும் விதமாக நேரடி அந்நிய முதலீட்டின் நடைமுறையில் மாற்றம் கொண்டுவந்துள்ள மத்திய அரசுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

dinamalar