உலகையே ஆட்டிப் படைக்கிறது, ‘கொரோனா’வைரஸ். சர்வதேச பொருளாதாரம், அதலபாதாளத்தில் கிடக்கிறது; உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறை ஸ்தம்பித்துள்ளன. விமானம் மற்றும் சுற்றுலா துறை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
இந்த கொரோனா காலகட்டத்தில், நமது அன்றாட சுகாதாரம் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வருங்காலத்தில், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுதும் புதிய தாக்கத்தை ஏற்படுத்த போவதாக கூறப்படுகிறது. இந்த நெருக்கடி நேரத்தில் நாம் கற்ற பாடங்கள், இனி வருங்காலத்திலும் நம்முடன் தொடரப் போகிறது. தீமையிலும் நன்மையை போல, கொரோனாவால் ஏற்படப் போகும் மாற்றங்களை பார்ப்போம்.
தனிநபர் சுகாதாரம்:
தினந்தோறும், நாம் வெளியில் செல்லும்போது, லட்சக்கணக்கான கிருமிகளுடன், நேரடி தொடர்பில் இருக்கிறோம். இது பற்றி நாம் இதுவரை பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. ஆனால், நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து, கொரோனா காலம், பல நல்ல பாடங்களை நமக்கு கற்று தந்துள்ளது. எனவே இரு வேளை குளித்தல், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் போன்ற தனி மனித சுகாதாரம் குறித்து, மக்கள் இனி அதிக கவனம் செலுத்த துவங்குவர்.
புறத்துாய்மை வேண்டும்:
நாடு முழுதும், ‘துாய்மை இந்தியா’ திட்டத்தை,பிரதமர் நரேந்திர மோடி, 2014ல் துவக்கினார். அதன் பிறகும் கூட, பொது இடங்களில் எச்சில் துப்புவது, குப்பை போடுவது, சிறுநீர், மலம் கழிப்பது போன்ற பழக்கங்கள், முழுவதுமாக ஒழிக்க முடியாத நிலை தொடர்கிறது. இனி வரும் மாதங்களில், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
கிருமி நாசினிகள்:
கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவுவது, வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்குள் நுழையும் முன், கைகளை கிருமி நாசினிகளால் சுத்தம் செய்து கொள்வது போன்றவை, அனைத்து பிரிவு மக்களுக்கும் அன்றாட பழக்கமாகி விட்டன. இவை, இனி வரும் காலங்களிலும், நிரந்தரமாக தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வீடே அலுவலகம்:
இந்த கொரோனா நாட்கள் கற்றுத் தந்த மிக முக்கியமான பழக்கவழக்கங்களில் ஒன்று, ‘வொர்க் ப்ரம் ஹோம்’ என்று அழைக்கப்படும், வீட்டில் இருந்து பணியாற்றும் பழக்கம். இது பல்வேறு துறைகளில் புதிய கலாசார மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆண்களும், பெண்களும், கணினி மூலம், தங்கள் அலுவல்களை, வீடுகளில் இருந்தபடியே, செய்ய பழகிக் கொண்டுவிட்டனர். இதனால், மின்சாரம் சேமிக்கப்படும், போக்குவரத்து நெரிசல் குறையும், பொது போக்குவரத்துகளில் நசுங்கியபடி மக்கள் பயணிக்க வேண்டியதில்லை, சுற்றுச்சூழல் மாசு குறையும் என்பது உட்பட பல்வேறு பலன்கள் உள்ளன. நகரங்களின் நெரிசலை குறைக்க, வீட்டிலிருந்து பணி செய்வது, நல்ல பலனை தரும் என்பது புரிய வைத்த காலகட்டம் இது.
மாசு குறைந்தது:
சீனாவில், இந்த ஆண்டு துவக்கத்தில், சுற்றுச்சூழல் மாசு, 25 சதவீதம் வரை குறைந்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், நிலக்கரி பயன்பாடு, 40 சதவீதம் குறைந்தது.இந்தியாவில், மார்ச், 1க்கு பின், 10 நாட்களில், மின்சார பயன்பாடு, 26 சதவீதம் வரை குறைந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு புரட்சி:
எல்லாருமே வீட்டில் இருந்து வேலை செய்ய துவங்கினால், அலுவலகங்களில் யார் பணியாற்றுவது என்ற கேள்வி எழுகிறது. ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான், இதற்கு மாற்றுவழி என, கூறப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, சீனா பெரும் அளவில் கையாண்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ‘ரோபோ’க்களை பயன்படுத்தியது, ‘பிக் டேட்டா’ தொழில்நுட்பம் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை எளிதாக கண்டறிந்தது உட்பட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சீனாவுக்கு பெரிதாக கைகொடுத்துள்ளது.
வளரும் தொழில்நுட்பம்:
‘கூகுள், ஆப்பிள்’ போன்ற பெரிய நிறுவனங்களில் இருந்து, சின்னச் சின்ன ‘மொபைல்’ செயலிகளை தயாரிக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரை, இனி வரும் காலங்களில், பெரும் வளர்ச்சி அடைய உள்ளதாக, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
‘டிஜிட்டல்’ கண்காணிப்பு:
வைரஸ் பரவல் உள்ளிட்ட எந்த பிரச்னைக்கும், டிஜிட்டல் கண்காணிப்பை அரசாங்கங்கள் செயல்படுத்த துவங்கிவிடும். போலீஸ் செய்யும் கண்காணிப்பு பணிகளை, ‘ஸ்மார்ட் போன்’ செய்துவிடும் காலம் வந்துவிட்டது. இதன் காரணமாக, தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
கல்வி:
அனைத்து கல்வி நிறுவனங்களும், தற்போது மூடப்பட்டுள்ள காரணத்தால், ‘ஆன்லைன்’ முறையில் வகுப்புகள் நடத்தும் வழக்கத்துக்கு வந்துள்ளனர். இந்த பழக்கம், இனி வரும் காலங்களிலும் தொடரும். இதில், கல்வி நிறுவனங்களுக்கு பலவிதமான வசதிகள் உள்ளன. இனி, பொது சுகாதாரம் என்பது, பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
சுகாதார பட்ஜெட்:
உயர் சிகிச்சைகளுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்வது, அர்த்தமற்றது என்பதை, நம் அரசியல் தலைவர்கள் உட்பட, வளரும் நாடுகளும் புரிந்து கொண்ட நேரமிது. இனிவரும் காலங்களில், உள்நாட்டு சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த,நம் அரசு, நிறைய செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.அரசியல்: அனைத்து நிலைகளிலும், மருத்துவ சேவைகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே, இன்றைய அரசியல் விவாதமாக உள்ளது. இந்த போக்கு, நம் ஜனநாயக வேர்களை, மேலும் வலுவாக்கும்.
‘இ — காமர்ஸ்’ புரட்சி:
மளிகை மற்றும் மருத்துவ பொருட்கள் விற்பனை, புதிய உச்சத்தை எட்டும். வீட்டுக்கு வந்து பொருட்களை வழங்கும் சேவைகளில், நிறைய வேலை வாய்ப்புகள் பெருகும். வீட்டில் இருந்தபடியே பொழுதை போக்கும், ‘ஆன்லைன்’ பொழுதுபோக்கு வசதிகளுக்கு வரவேற்பு அதிகரிக்கும். தியேட்டர் உள்ளிட்ட கூட்ட நெரிசல் பகுதிகளை, மக்கள் புறக்கணிக்க துவங்குவர்.
மதக்கூட்டங்கள்
அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும், அதிகம் கூட்டம் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அப்பகுதிகளின் சுகாதார விஷயத்தில், பல புதிய சட்ட திட்டங்கள் விதிக்கப்படும்.
மீண்டும் கிராமம்: கிருமி தொற்றுகள், நகரங்களில் வேகமாக பரவுகிறது. கிராமப்புறங்களில், கொரோனா தொற்றுகள் அதிக அளவில் ஏற்படவில்லை என்பதை கண்கூடாக காண்கிறோம். இதனால், கிராமங்களில் மக்கள் அதிக முதலீடுகளை செய்ய வாய்ப்புள்ளது.
சுத்தமான உணவு:
ஓட்டல்களில் பேணப்படும் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து, நீண்ட நாட்களாகவே பல கேள்விகள் இருக்கின்றன. இனி, மிக கடுமையான சட்டதிட்டங்கள் வகுக்கப்படும் என நம்புவோம். ஓட்டல் முதல் சாலையில் விற்கப்படும் உணவுகள் வரை, அனைத்தும் சுத்தமாகவும், தரமாகவும் கிடைக்க, கொரோனா வழி செய்துள்ளது.
பாரம்பரிய மருத்துவம்:
மஞ்சள், துளசி, வேம்பு போன்ற பாரம்பரிய உணவுகளின் மருத்துவ குணங்கள் குறித்து, நாம் அறிந்து கொண்ட காலம் இது. எனவே, பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவத்துக்கு, இனி பெரும் வர்த்தகம் காத்திருக்கிறது.
dinamalar