ஊழியர்களுக்கு சம்பளம் தர கட்டாயப்படுத்த முடியாது – பாராளுமன்ற குழு அறிக்கை

கொரோனா வைரசுக்கு எதிரான ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என பாராளுமன்ற குழு அறிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி: கொரோனா வைரசுக்கு எதிரான ஊரடங்கால் நாட்டில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிக்கையை தொழிலாளர்கள் நலனுக்கான நாடாளுமன்ற குழு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பர்த்ருஹரி மகாதேவ், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் ஆன்லைன் வழியாக சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நில நடுக்கம், வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால், நிறுவன அதிபரின் தவறாக இல்லாமல் பல தொழில் நிறுவனங்களும் மூடப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் மீண்டும் செயல்படுகிறவரையில், பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதை நியாயப்படுத்த முடியாது.

தற்போது கொரோனா வைரசுக்கு எதிரான ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே அவற்றின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட ஒரு தொழில்நிறுவனத்துக்கு பொருந்தக்கூடிய பணி நீக்கம், நிறுவனத்தை மூடுதல் போன்றவற்றுக்கு ஏற்கனவே வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை 300 தொழிலாளர்களை கொண்ட நிறுவனத்துக்கும் ஏற்றதாக செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது தொழிலாளர்கள் நலனுக்கான நாடாளுமன்ற குழுவின் உறுப்பினர்களான கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), எம்.சண்முகம் (தி.மு.க.), இளமரம் கரீம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகியோர் எதிர்கருத்துகளை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

malaimalar