கேரளாவில் இருந்து ஒடிசாவிற்கு வெளிமாநில தொழிலாளிகள் 1088 பேருடன் நேற்று மாலை சிறப்பு ரெயில் புறப்பட்டது.
திருவனந்தபுரம்: கேரளாவில் வெளிமாநிலங்களை சேர்ந்த 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர்.
கொரோனா நோய் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இவர்கள் வேலையின்றி தவித்தனர். எனவே தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களை கேரள அரசு சிறப்பு முகாம்கள் அமைத்து பாதுகாத்தது. மேலும் உணவும் வழங்கி வந்தது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் வெளிமாநில தொழிலாளிகளை அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்க அந்தந்த மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து கேரள அரசு கேரளாவில் தங்கி உள்ள ஒடிசா மாநில தொழிலாளிகளை புவனேசுவரம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தது.
கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் தான் ஒடிசாவை சேர்ந்த ஏராளமான தொழிலாளிகள் தங்கி உள்ளனர். அவர்களில் ஊர் திரும்ப விருப்பம் உள்ளவர்கள் தேர்வு செய்யப்டடனர். அவர்கள் அனைவரும் அரசு பஸ்களில் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மொத்தம் 1088 பேர் ஊர் செல்ல விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர். அவர்கள் அனைவரும் சிறப்பு ரெயில் மூலம் ஒடிசாவின் புவனேசுவரத்திற்கு அனுப்பப்பட்டனர். சிறப்பு ரெயில் நேற்று மாலை 6 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. தொழிலாளிகளின் பெயர்களை பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சில மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
ஒரு பெட்டியில் 60 தொழிலாளிகளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அமரவைக்கப்பட்டனர். பயணிகளுக்கு கேரள அரசு அதிகாரிகள் உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை வழங்கினர்.
கேரளாவின் ஆலுவாவில் புறப்பட்ட ரெயில் இடைப்பட்ட நிலையங்களில் எங்கும் நிற்காது. ஒடிசாவின் புவனேசுவரத்தில் தான் நிற்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கேரள உள்துறை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா கூறும்போது, கேரளாவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு முதல் ரெயில் புறப்பட்டு உள்ளது. அண்டை மாநிலங்களின் உதவியால் இது சாத்தியமானது.
மத்திய அரசின் உத்தரவை பெற்று இன்று முதல் கூடுதல் ரெயில்களை இயக்க ஏற்பாடு செய்வோம். திருவனந்தபுரம், கோழிக்கோட்டில் இருந்து இந்த ரெயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளோம், என்றார்.
malaimalar