இந்தியாவில் இருந்து ‘ஐ.என்.எஸ். ஷர்துல்’ போர்க்கப்பல் துபாய் விரைகிறது

இந்தியாவில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஐ.என்.எஸ். ஷர்துல் போர்க்கப்பல்.

அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து செல்வதற்காக ஐ.என்.எஸ். ஷர்துல் என்ற இந்திய போர்க்கப்பல் இந்தியாவில் இருந்து துபாய்க்கு விரைகிறது. இந்த நிலையில் அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு நாளையும் (வியாழக்கிழமை), சென்னைக்கு நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) சிறப்பு விமான சேவை இயக்கப்படுகிறது.

துபாய்: உலகம் முழுவதும் ‘கொரோனா’ பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘கொரோனா’ எதிரொலியாக அமீரகம், இந்தியாவில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனவே விசிட் விசாவில் வந்தவர்கள், சுற்றுலா பயணிகள், வர்த்தக நிமித்தமாக வருகை தந்தவர்கள் என பலர் அமீரகத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

அதேபோல் வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களும் அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே வளைகுடா மற்றும் அமீரகத்தில் உள்ளவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 12 நாடுகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் பணி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக நாளை முதல் 13-ந் தேதி வரை ஏர் இந்தியா சார்பில் 64 விமானங்கள் இயக்கப்படுகிறது.

இத்தகவலை மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, ‘‘13-ந் தேதிக்கு பிறகு, தனியார் மீட்பு விமானங்கள் இப்பணியில் ஈடுபடும். பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தியா வந்த பிறகு, அப்பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்’’ என குறிப்பிட்டார்.

எனவே அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள https://cgidubai.gov.in/covid_register/ என்ற இணையதள முகவரியில் அமீரகத்தில் இருந்து தற்போதுவரை 2 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.

இதில் பாதிபேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என துணைத்தூதரகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) முதல் அபுதாபி மற்றும் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் கேரளாவுக்கு இயக்கப்பட உள்ளன.

இந்த விமானங்கள் கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு பயணிகளை ஏற்றி செல்ல உள்ளது. விமான டிக்கெட்டுகளை பொறுத்தவரை தென்னிந்திய பயணிகளுக்கு குறைந்தபட்ச கட்டணமாக நபருக்கு 630 திர்ஹாம் ஆக இருக்கலாம் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) துபாயில் இருந்து இரண்டு விமானங்கள் சென்னைக்கு இயக்கப்பட உள்ளன. இந்த விமானங்களில் ஒரு முறைக்கு தலா 200 பேர் சமூக இடைவெளி இல்லாமல் ஏற்றி செல்லப்படுவார்கள்.

அமீரகத்திற்கு மொத்தம் 40 ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் 24 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் அனுப்பப்பட்டு அதன் மூலம் முதல் வாரத்தில் 2 ஆயிரம் இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒருவாரத்தில் 10 விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.

அதேபோல் இந்தியாவில் இருந்து கப்பல் மூலமாகவும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மும்பையில் இருந்து ஐ.என்.எஸ். ஐலஷ்வா, ஐ.என்.எஸ். மாகர் மற்றும் ஐ.என்.எஸ் ஷர்துல் ஆகிய மூன்று போர்க்கப்பல்கள் மாலத்தீவு மற்றும் வளைகுடா நாடுகளை நோக்கி விரைந்துள்ளன.

இதில் ஐ.என்.எஸ். ஷர்துல் என்ற கப்பல் துபாய்க்கு வருகிறது. ஐ.என்.எஸ். மாகர் என்ற கப்பல் மாலத்தீவுக்கு செல்கிறது. இந்த கப்பல்கள் மூலம் கணிசமான இந்தியர்கள் தாயகம் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

இந்த நிலையில் அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்கான முன்பதிவு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாயகம் திரும்ப நினைப்பவர்கள் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளுமாறும் இந்திய துணைத்தூதர் விபுல் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு ஆரோக்கிய சேது செயலி, 050-899-5583 என்ற இந்திய தூதரக உதவி எண், 056-546-3903 மற்றும் 054-309-0575 ஆகிய துணைத்தூதரக உதவி எண், [email protected] மற்றும் [email protected] ஆகிய இ-மெயில் முகவரி போன்றவற்றை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Malaimalar