சென்னையில் மின்னல் வேகத்தில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு என்ன காரணம்?

சென்னையில் பல்வேறு காரணங்களால் மின்னல் வேகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

சென்னை; சென்னையில் இன்றைய நிலவரப்படி இதுவரை 2008 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 327 குணமடைந்த நிலையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

1652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள மண்டல வாரி பட்டியலிலில்  திருவொற்றியூரில் 32 பேரும், மணலியில் 13 பேரும், மாதவரத்தில் 27 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தண்டையார் பேட்டையில் 149 பேரும், ராயபுரத்தில் 321 பேரும், திரு.வி.க. நகரில் 395 பேரும் பாதிக்கப்பட்டனர். அம்பத்தூரில் 98 பேரும், அண்ணா நகரில் 169 பேரும், தேனாம்பேட்டையில் 230 பேரும் பாதிக்கப்பட்டனர். கோடம்பாக்கத்தில் 327 பேரும், வளசரவாக்கத்தில் 146 பேரும், ஆலந்தூரில் 11 பேரும் பாதிக்கப்பட்டனர். அடையாறில் 53 பேரும், பெருங்குடியில் 15 பேரும், சோழிங்கநல்லூரில் 13 பேரும் பாதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்புகள் சென்னையில் மட்டும் தினம்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம கோயம்பேடு மார்க்கெட். தற்போது திருமழிசைக்கு மாற்றப்பட்டிருக்கும் கோயம்பேடு மார்க்கெட்டை, முன்பே இரண்டு அல்லது மூன்றாக பிரித்து வேறு பகுதிகளுக்கு மாற்றி இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.

திருவான்மியூர் சந்தையை பிரித்தது போலவே, கோயம்பேடு சந்தையையும் பிரித்திருந்தால், இவ்வளவு பெரிய பாதிப்பை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, போதிய மருத்துவ உபகரணங்கள் முன்கூட்டியே வழங்காததும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அளவு முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் முழு உடல் கவசங்கள் வழங்கப்படவில்லை எனவும், இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கும் அடுத்தடுத்து தொற்று பரவியதாகவும் மாநகராட்சி பணியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கிற்குள் போடப்பட்ட 4 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பும், கொரோனா தொற்று அதிவேகமாக பரவியதற்கான காரணமாக குற்றம் சாட்டப்படுகிறது. முழு ஊரடங்கால் அச்சமடைந்த மக்கள், ஏப்ரல் 25-ம் தேதி, கட்டுக்கடங்காத கூட்டம் காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் குவிந்தனர். அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால், சில மளிகைக் கடை உரிமையாளர்களுக்கும் காய்கறிகடை உரிமையாளர்களுக்கும் கொரோனா தொற்று பரவியதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உதவி புரிந்த தன்னார்வலர்களுக்கு முன்கூட்டியே மருத்துவ பரிசோதனை செய்யாததும், பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது.  குறிப்பாக திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா பரவியது, தன்னார்வலர் ஒருவர் மூலமாக தான் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்ட பின், தன்னார்வலர்களுக்கு கொரோனா பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா குறித்து மக்களிடம் போதுமான விழிப்புணர்வை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. கட்டுப்பாட்டு பகுதிகளை முன்கூட்டியே மாநகராட்சி அறிவிக்காதது மக்களிடம் அலட்சியத்தை ஏற்படுத்தியதாகவும், வேளச்சேரி பீனிக்ஸ் மால் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல், அனைத்து பகுதி பாதிப்புகளுக்கு கவனம் செலுத்தி இருக்கவேண்டும் என முன்னாள் அதிகாரிகள் கூறுகின்றனர்.சென்னையில் நிகழ்ந்த இந்த ஐம்பெரும் தவறுகளால், மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருவதாக பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

Malaimalar