கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும் – மத்திய மந்திரி

கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறி உள்ளார்.

புதுடெல்லி, சீனாவில் உகான் நகரில் உருவாகி உலகமெங்கும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில்  கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த தொற்று, 43 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளதாகவும், 2 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளதாகவும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் தொற்று தரவு மையம் கூறுகிறது.

இந்த கொடிய வைரஸ் இயற்கையாக உருவானதா, உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதா என்பதில் பெருத்த சர்ச்சை நிலவுகிறது.

ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அங்கிருந்து கசிந்துதான் உலகமெங்கும் பரவிவிட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டி வருகிறது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் உகான் ஆய்வுக்கூடத்தில் உருவானது அல்ல, இயற்கையாக உருவானதுதான் என்று சீன விஞ்ஞானிகள் புதிய ஆதாரத்தை காட்டுகின்றனர்.

இந்த விஞ்ஞானிகள், வவ்வால்களில் சார்ஸ் கோவ்-2-வின் நெருங்கிய உறவு வைரசை (ஆர்எம்ஒய்என்-02) அடையாளம் கண்டுள்ளனர். இதுதான், கோவிட்-19 என்று அழைக்கப்படுகிற கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவாக்காமல் இயற்கையாக உருவானதற்கு ஆதாரம் என்று ஆராய்ச்சி நடத்தியுள்ள ஷான்டாங் முதல் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி நிதின் கட்காரி இது ஒரு இயற்கை வைரஸ் அல்ல. இது ஒரு செயற்கை வைரஸ் என கூறினார்.

அவர் கூறியதாவது;-

கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும். இது ஒரு இயற்கை வைரஸ் அல்ல. இது  ஆய்வகத்தில் உருவான ஒரு செயற்கை வைரஸ்.  இப்போது உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகள் தடுப்பூசிக்காக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். தடுப்பூசி கிடைக்கவில்லை,  தடுப்பூசி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் எந்த பிரச்சினையும் இருக்காது

உலகம் இப்போது தயாராக உள்ளது, இந்திய விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர். அதற்கான தீர்வைக் கண்டுபிடித்த பிறகு, நாம் நம்பிக்கையை உருவாக்க முடியும். ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் பிறகு எந்த பிரச்சினையும் இருக்காது,

நாடு தழுவிய கொரோனா வைரஸ் ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அச்சம் காரணமாக வெளியேறினர், வணிகங்கள் மீண்டும் திறக்கப்படும் போது அவர்கள் திரும்பி வருவார்கள்.நாம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும், ஆனால் நாம் ஒரு பொருளாதார யுத்தத்தையும் எதிர்த்துப் போராட  வேண்டும். நாம் ஒரு ஏழை நாடு, ஊரடங்கை ஒரு மாதத்திற்கு மேல் அதிகரிக்க முடியாது,” என்று அவர் கூறினார்

dailythanthi