அம்பன் புயலால் சிறப்பு விமானங்கள், ரெயில்கள் ரத்து

அம்பன் புயல் செல்லும் பாதை

அம்பன் புயல் இன்று மேற்கு வங்க கடற்கரையில் கரை கடக்க உள்ளதால், சிறப்பு விமானங்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொல்கத்தா: வங்கக்கடலில் உருவான அம்பன் புயல், சூப்பர் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரத் தொடங்கியது. பின்னர் அதி தீவிர புயலாக வலுவிழந்த நிலையில், இன்று காலையில் ஒடிசாவின் பாரதீப் பகுதியில் இருந்து 120 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.

அதன்பின்னர் மணிக்கு 22 கிமீ வேகத்தில் நகர்ந்து, பூரி – கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. அம்பன் புயல் கரையை நெருங்கி வருவதால், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புயல் மேலும் வலுவிழந்து மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று மாலை கரையை கடக்க உள்ளது.

அம்பன் புயல் காரணமாக, கொல்கத்தா விமான நிலையத்தில் நாளை காலை 5 மணி வரை அனைத்து செயல்பாடுகளும் ரத்து செய்யப்பட்டன. சிறப்பு விமானங்களும் இயக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புறப்படவிருந்த ஹவுரா-புதுடெல்லி சிறப்பு ரெயில், நாளை இயக்கவிருந்த புதுடெல்லி-ஹவுரா சிறப்பு ரெயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சுந்தரவனக் காடுகளுக்கு அருகில் உள்ள திகா (மேற்கு வங்கம்) மற்றும் ஹதியா தீவுகள் (வங்கதேசம்) இடையே புயல் கரைகடக்கும் என்றும், கரை கடக்கும் நிகழ்வு பிற்பகல் முதல் துவங்கி மாலையில் முடிவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 155 முதல் 165 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 68 மணி நேரம் மிக முக்கியமானது என ஒடிசா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் ஜேனா கூறி உள்ளார்.

malaimalar