பல் மருத்துவமனைகள் செயல்படலாமா? விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு

புதுடில்லி : ‘வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், பல் மருத்துவமனைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்; மற்ற பகுதிகளில் உள்ள பல் மருத்துவமனைகள், நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம்’ என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பல் வலியால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளும் செயல்படவில்லை. இந்நிலையில், பல் மருத்துவமனைகள் செயல்படுவது தொடர்பாக, புதிய விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்கள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில், பல் மருத்துவமனைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அதேநேரத்தில், தொலைபேசி, ‘வீடியோ கான்பரன்சிங்’ வாயிலாக, நோயாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்கலாம். அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை, ஆம்புலன்ஸ் மூலமாக, அருகில் உள்ள கொரோனா மருத்துவ மையங்களில் செயல்படும் பல் சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.

பல் சிகிச்சையின் போது, நோயாளியின் உமிழ் நீர், பல்லில் இருந்து வெளியேறும் ரத்தம் போன்ற பிரச்னைகளால், வைரஸ் எளிதில் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, பல் சிகிச்சை தொடர்பான நடைமுறைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

dailymalar