பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள பயங்கரவாதிகள்

புதுடில்லி: ”கோடைக் காலத்தை பயன்படுத்தி, நம் நாட்டிற்குள் ஊடுருவ, அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ளனர்,” என, உயர்மட்ட ராணுவ தளபதி, லெப்டினென்ட் ஜெனரல், பாகவல்லி சோமாஷேகர் ராஜு கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: பயங்கரவாதத்தின் முதுகெலும்பை, நாம் ஏற்கனவே உடைத்துஉள்ளதால், ஜம்மு — காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படாமல் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். ஆனால், இதை பாகிஸ்தானால் ஜீரணிக்க முடியவில்லை.

ஊடுருவ திட்டம்: பயங்கரவாதத்தின் பின்புலம், ஏறக்குறைய உடைந்துவிட்டது. பயங்கரவாதிகளை அகற்றுவதில் நாம் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளோம். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கையை ஈடுசெய்ய, கோடைக்காலத்தில் எல்லை தாண்டிய ஊடுருவலை பாக்., அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். இதற்கு அடிப்படையாக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முகாம்களில், பயங்கர வாதிகள் குவிந்துள்ளனர்.

அங்குள்ள, 15 ஏவுதளங்களும் நிரம்பியுள்ளன. இவர்கள், பாக்., ராணுவத்தின் உதவியுடன், நம் நாட்டிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர்.இதுபோல், கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கு, பாக்., உதவி வருகிறது.

எதிர்ப்பு:

அவர்களுக்கு ஆதரவாக, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் செயல்படுகிறது. போர் நிறுத்த மீறல்களுக்கு நாம் கொடுத்த பதிலடியில், அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளில், உலகம் ஒன்றிணைந்து செயல்படும் நிலையில், இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில், பாக்., தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், எல்லையில் நம் வீரர்கள், பாக்.,கின் அனைத்து நடவடிக்கைகளையும் முறியடிக்க, தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

dinamalar