கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை

பிரதமர் மோடி

சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.

புதுடெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு நிபந்தனைகளுடன் தொழில் நிறுவனங்களில் பணிகள் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு, ‘வளர்ச்சியை மீண்டும் பெறுதல்’ என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

கொரோனா பாதிப்பால் ஆன்லைன் நிகழ்ச்சிகள் புதிய முயற்சியாக இருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும். அதே நேரத்தில் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும். கொரோனா வைரசை எதிர்த்து போராட, நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

இந்த சூழ்நிலையில், ‘வளர்ச்சியைத் மீண்டும் பெறுதல்’ என்ற நடவடிக்கையை சிஐஐ தொடங்கியுள்ளது. இதற்காக இந்தியத் தொழில்துறையினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம். விவசாயம்,  தொழில் செய்வோர், தொழில் முனைவோர், தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் விரைவில் மீளும். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவது நமது முன்னுரிமைகளில் ஒன்று. இதற்காக அரசாங்கம் உடனடி முடிவுகளை எடுத்துள்ளது. நாட்டிற்கு  நீண்ட காலம் உதவக்கூடிய முடிவுகளையும் எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

malaimalar