டில்லி ஜும்மா மசூதி மீண்டும் மூடல்?

புதுடில்லி: டில்லியில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வரும் நிலையில், ஜும்மா மசூதியை மீண்டும் மூட ஆலோசித்து வருவதாக, இமாம் தெரிவித்துள்ளார்.

டில்லியில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 31 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 905 பேர் பலியாகி உள்ளனர். ஜூலை இறுதிக்குள் டில்லியில் 5.50 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மார்ச், 25 மூடப்பட்ட வழிபாட்டு தலங்களை, 8ம் தேதி முதல் திறக்க, முதல்வர், கெஜ்ரிவால் அனுமதியளித்தார். இதையடுத்து, வழிபாட்டு தலங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆனால், டில்லியில் வைரஸ், சமூக பரவலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. ஜும்மா மசூதி இமாம், சையத் அகமது புகாரின் செயலர், அமானுல்லா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்தார். டில்லியில் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு, ஜும்மா மசூதியை மீண்டும் மூட ஆலோசித்து வருவதாக, இமாம் தெரிவித்தார்.

dinamalar