மீண்டும் முழு ஊரடங்கு: சென்னைக்கு விமானங்கள் இயங்குமா?

சென்னை: சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில், வரும், 19ம் தேதி முதல், 12 நாட்களுக்கு, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னைக்கு வந்து செல்லும் விமானப் பயணியரின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில், மே, 25ல் இருந்து, உள்நாட்டு விமான சேவை நடந்து வருகிறது. விமானங்களில் செல்ல வரும் பயணியர் மற்றும் பல்வேறு நகரங்களிலிருந்து, சென்னை வரும் பயணியர், பஸ், ரயில்கள் இயங்காததால், வாடகை டாக்சிகளில் பயணிக்கின்றனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில், டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான நிலையத்திற்கு பயணியர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசிடம், இது சம்பந்தமாக ஆலோசனை நடத்த உள்ளோம். ‘இன்னும், ஓரிரு நாட்களில், விமானங்கள் இயக்கம் மற்றும் பயணியரின் போக்குவரத்து குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்’ என்றனர்.

dailythanthi