குடியுரிமை திருத்த சட்டம்: கையில் எடுக்கிறது பா.ஜ.,

புதுடில்லி: இந்த ஆண்டு துவக்கத்தில் நாட்டின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை பா.ஜ. மீண்டும் கையில் எடுத்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள அந்நாடுகளின் மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா பார்லிமென்டில் கடந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த ஆண்டு மார்ச்15 வரை இந்தப் போராட்டங்கள் நீடித்தன.அதன்பின் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த போராட்டங்கள் காணாமல் போயின. குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் அடங்கிப் போனது.

பீஹார் சட்டசபைக்கு இந்தாண்டு அக்டோபர் – நவம்பரில் தேர்தல் நடக்க உள்ளது. மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ. மூத்த தலைவருமான அமித் ஷா பீஹார், ஒடிசா, மேற்கு வங்க மக்களுடன் ‘ஆன்லைன்’ வழியாக பேசினார்.

பீஹார் மக்களிடம் பேசுகையில், அயோத்தி ராமர் கோவில், குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய விவகாரங்கள் பற்றி பேசினார். ஒடிசா மக்களிடம் பேசும் போது, பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா திட்டம் பற்றி பேசிய அமித் ஷா, கொரோனா பரவலை தடுக்க உதவிகள் பற்றியும் பேசினார்.

மேற்கு வங்க மக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தான் அதிகம் பேசினார். இதை எதிர்ப்பதற்கான காரணத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் 1947ம் ஆண்டு பிரிவினையின் போது இந்தியா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதாக கூறினார்.

பீஹாரிலும், மேற்கு வங்கத்திலும் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் தான் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி அமித ஷா பேசியுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

dinamalar