எல்லையில் இருந்து வாபஸ்: இந்திய – சீன ராணுவம் முடிவு

புதுடில்லி: இந்திய – சீன ராணுவத்தினரிடையே நடந்து வரும் மோதல் போக்கை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், இரு நாட்டு ராணுவத்தினரும் தங்களை படைகளை விலக்கி கொண்டு முகாமிற்கு திரும்ப முடிவு செய்துள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி இந்திய – சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 76 வீரர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டது. சீனத் தரப்பிலும் உயிர்ச்சேதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் அந்நாடு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இரு நாடுகள் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. இதையடுத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள இரு தரப்புகளும் முடிவெடுத்தன. இந்நிலையில் இந்திய மற்றும் சீன ராணுவத் தரப்புகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சீன கட்டுப்பாட்டில் இருக்கும் மோல்டோவில் பேச்சுவார்த்தை நடத்தின.

சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இரு நாட்டு ராணுவத்தை சேர்ந்தவர்களும் தங்களுடைய முகாமிற்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்து இந்திய ராணுவம் கூறியுள்ளதாவது:
ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தையில் இரு தரப்பு படைகளும் விலகிச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையானது கட்டுக்கோப்பான மற்றும் நேர்மறையான ரீதியில் நடந்தது. கிழக்கு லடாக் பகுதியில் மோதல் போக்கு நிலவி வரும் அனைத்து இடங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இரு தரப்புகளும் பிரச்னைக்குரிய இடங்களிலிருந்து விலகிச் செல்வது என ஒப்புக் கொண்டன. இவ்வாறு இந்திய ராணுவம் கூறியுள்ளது.

dinamalar