கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுகிறது- இந்திய விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறித்து குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

அந்த ஐ.ஐ.டி.யின் புவி அறிவியல் துறை தலைவர் மணீஷ் குமார் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. குஜராத் உயிரிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு நடந்தது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடந்த மே 8-ந் தேதி முதல் 27-ந் தேதிவரை சேகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஆமதாபாத் சிவில் ஆஸ்பத்திரியில் இருந்து தினமும் 10 கோடியே 60 லட்சம் லிட்டர் கழிவுநீர், இந்த சுத்திகரிப்பு நிலையத்துக்கு வருகிறது.

இந்த ஆய்வில், கழிவுநீரில் கொரோனா வைரஸ் மரபணுவை ஒத்துள்ள 3 வைரஸ் படிமங்களும் கண்டறியப்பட்டுள்ளன. மே 8-ந் தேதி காணப்பட்ட வைரஸ் அடர்த்தியை விட மே 27-ந் தேதி வைரஸ் அடர்த்தி அதிகமாக இருந்தது.

அதாவது, ஆமதாபாத் சிவில் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க வைரஸ் அடர்த்தி அதிகரித்துள்ளது.

இதனால், கழிவுநீர் மூலம் கொரோனா பரவுவது தெரிய வந்துள்ளது. இத்தாலி போன்ற நாடுகள் ஏற்கனவே இதை கண்டுபிடித்துள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இத்தாலியில் முதலாவது கொரோனா பாதிப்பு, கடந்த பிப்ரவரி மாதம்தான் ஏற்பட்டது. ஆனால், அதற்கு 2 மாதங்களுக்கு முன்பே, கழிவுநீரில் கொரோனா வைரஸ் மரபணு போன்ற வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, மனிதர்கள் மூலம் கொரோனா பரவும் என்ற கண்ணோட்டத்தில் மாறுதல் வர வாய்ப்புள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் கழிவுகளில் கொரோனா வைரஸ் இருப்பது சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்த ஆய்வு முடிவுகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.

கழிவுநீரில் வைரஸ் எப்படி பரவியது, அதை எப்படி தடுப்பது என்று மேற்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ள இது உதவிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

malaimalar