இந்தியாவில் 4.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- உயிரிழப்பு 14894 ஆக உயர்வு

இந்தியாவில் 4.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 14894 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முக்கிய நகரங்களில் பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 473105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 16922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 418 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14894 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது.

இதுவரை 271697 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 57.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 186514 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 142900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 70390 பேருக்கும், தமிழகத்தில் 67468 பேருக்கும், குஜராத்தில் 28943 பேருக்கும், ராஜஸ்தானில் 16009 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 12448 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

malaimalar