கொரோனா பரவல் வேகம்: உலகிலேயே சென்னை இரண்டாம் இடம்

சென்னை: உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நகரங்களில் லாஸ்ஏஞ்சல்ஸ்க்கு அடுத்தபடியாக சென்னை உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஜூன் 30ம் தேதி சென்னையில் 2,393 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதே நாளில் டில்லியில் 2,199 பேருக்கு தொற்று ஏற்பட்டது. சென்னையில் கடந்த மார்ச் மாதம் 9ல் முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச்சில் கொரோனா தொற்று குறைவாக உள்ளது. ஏப்ரலில் சற்று வேகமாக பரவல் ஆரம்பித்தது.

தற்போது சென்னையில் தான் கொரோனா பரவல் அதிக வேகமாக உள்ளது. ஜூன் 30ம் தேதி இந்தியாவிலேயே கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்ட நகரமாக சென்னை மாறியது. சென்னைக்கு அடுத்தபடியாக டில்லி, தானே, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கவுகாத்தி பால்கர், மற்றும் ராய்காட் நகரங்கள் உள்ளன.

உலகளவில் லாஸ் ஏஞ்சல்ஸ், சென்னை, சாண்டியாகோ, டில்லி, சா பாலோ, தானே, மியாமி, பியூனஸ் அயர்ஸ், சல்வாடர், லிமா ஆகிய நகரங்கள் கொரோனா அதிகம் பரவும் நகரங்களாக உள்ளன.

இந்நிலையில் சென்னையிலும் தமிழகத்திலும் கொரோனா சோதனை எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது ஜூன் மாதம் தமிழகத்தில் சோதனை இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 10 லட்சம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்ககள் தெரிவிக்கின்றன. சோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா அதிகம் பரவும் நகரமாக மும்பை இருந்தது. ஜூன் மாதத்தில் டில்லி கொரோனா அதிகம் பரவும் நகரமானது. தற்போது சென்னை, டில்லியை முந்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

dinamalar