புதுடில்லி: லடாக்கில் இந்திய – சீன எல்லையில் அமைந்துள்ள விமானப் படையின் தளம், எந்த நேரமும் பரபரப்புடன் காணப்படுகிறது. போர் விமானங்கள், சரக்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என, மாறி மாறி தரையிறங்குவதும், புறப்படுவதுமாக உள்ளன. எந்த நிலையையும் சந்திக்க, விமானப் படை தயாராக உள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
கடும் நெருக்கடி
இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. ராணுவ நிலையிலான பேச்சுவார்த்தைகளில், ‘படைகளை திரும்பப் பெறுவது’ என முடிவு செய்யப்படுகிறது. ஆனால், எல்லையில் தொடர்ந்து படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. சீனாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில், நம்முடைய எல்லையில், படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. ராணுவம் மற்றும் ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படைகளுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன், அந்தப் பகுதியில் தீவிர ரோந்தில், நம் விமானப் படை ஈடுபட்டுள்ளது.
விமானப் படையின் மிகப் பெரிய சரக்கு விமானங்களான, அமெரிக்க தயாரிப்புகளான, சி – 17 மற்றும் சி – 130ஜே ஆகியவை மூலம், ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதைத் தவிர, ரஷ்ய தயாரிப்பான இலிஷின் – 76, ஆன்டனோவ் – 32 ஆகிய விமானங்கள், வீரர்களையும், தேவையான பொருட்களையும் கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளன.
இதைத் தவிர, அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், ரோந்து பணியில் தீவிரமாக உள்ளன. முப்படைகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர், அடிக்கடி வந்து, ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.இவ்வாறு எந்த நேரத்திலும், மிகவும் பரபரப்பான தளமாக, எல்லையில் உள்ள, இந்த விமானப் படை தளம் மாறியுள்ளது. ‘எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள, விமானப் படை முழு அளவில் தயாராக உள்ளது’ என, விமானப் படை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
dinamalar