புதுடில்லி; வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள, வைர வியாபாரி நிரவ் மோடியின், 329 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கிஉள்ளது.
நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்ஸி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்துள்ளது. பிரிட்டனில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள நிரவ் மோடி, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை, சி.பி.ஐ., மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோர் மீது, அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இதில், நிரவ் மோடிக்கு சொந்தமான, 329.66 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க, தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மும்பை யில், வொர்லி பகுதியில் உள்ள, ‘சமுத்ர மஹால்’ எனும் குடியிருப்பு, அலிபாக் பகுதியில் உள்ள நிலம், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் உள்ள, காற்றாலை நிறுவனம். லண்டனில் உள்ள ஒரு குடியிருப்பு, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்குகள், வங்கி டிபாசிட்டுகள் ஆகியவை முடக்கப்பட்டு உள்ளன.
malaimalar