வேலைவாய்ப்பை அதிகரிக்கவே தனியார் மயம்: ரயில்வே வாரியத்தலைவர்

புதுடில்லி: புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவர மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவே ரயில்வேயில் தனியார்மயமாக்கம் கொண்டு வரப்பட்டது என ரயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:ரயில்வே துறையில் தனியாரை ஈடுபடுத்துவதனால் எந்த வேலை வாய்ப்பும் பறிபோகாது அதே நேரத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்படத்தை கொண்டு வரும்.

ரயில்வே துறை குறைந்தபட்ச உத்தரவாத செலவை மீட்டெடுக்கும் வகையில் சிலவழித் தடங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. தனியார் ரயில் ஆபரேட்டர்கள் நிர்ணயிக்கும் கட்டணம் மிக அதிகமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளில் ரயில்வே உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் எந்த ஒரு பயணியரும் காத்திருப்பு பட்டியலில் இருக்க மாட்டார்கள். 151 ரயில்களின் செயல்பாட்டு மூலம் ரயில்வேக்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள பகுதியில் உள்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கும் மேலும் அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்குவதற்கும் தற்போதுள்ள உள் கட்டமைப்பை மேம்படுத்தவும் முடியும்.

தற்போதைய சூழ்நிலையில் பயணிகள் ரயில் மூலம் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறோம். குறிப்பிட்ட வழித்தடத்தை தனியார் மயமாக்கப்படுவதால் ரயில்வே எதையும் இழக்கப்போவதில்லை. அதே நேரத்தில் ரயில்வேயின் குறைந்த பட்ச செலவை சமாளிக்க முடியும் என்பதுடன் அதற்கு மேல் வரும் வருமானம் ரயில்வேக்கு லாபமாக இருக்கும் என அவர் கூறினார்.

dinamalar