பெங்களூருவில் 564 போலீசாருக்கு கொரோனா; வரும் 22ம் தேதி வரை முழு ஊரடங்கு

22ம் தேதி வரை முழு ஊரடங்கு

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை, 564 ஆக உயர்ந்துள்ளதையடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்வதில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை, 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்; 700 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகப்படியானவர்கள் பாதிக்கப்பட்டது பெங்களூருவில் தான். இதனால் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த இன்று (14ம் தேதி) இரவு 8:00 மணி முதல் 22ம் தேதி அதிகாலை வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் கூறியதாவது:

பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், குற்றங்களை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது. கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 564 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று அறிகுறியுள்ள 517 போலீசார் வீட்டிலும், 732 போலீசார் அரசு கண்காணிப்பு மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 25 காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன

போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம். 50 வயதுக்கு மேற்பட்டோர், அறுவை சிகிச்சை மேற்கொண்டோர், தீவிரஉடல் நோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு பணியில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 40 சதவீத மகளிர் போலீசாருக்கு வீட்டில் இருந்தவாறு பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பணியில் உள்ள அனைத்து காவலர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். வாகனங்களில் வெளியே சென்றுவரும் போலீசார் காவல் நிலையத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்ற விவகாரங்களில் தொடர்புடையவர்களை, கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிந்த பின்னரே கைது செய்ய வேண்டும். புகார் அளிக்க வருபவர்களிடம் 6 அடி இடைவெளியுடன் பேச வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கிருந்து பலரும் பல்வேறு பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து வருகின்றனர். அவர்கள் முறையான அனுமதி பெறாமல் தமிழகத்திற்குள் நுழைவதைத் தடுக்க, கர்நாடக – தமிழக எல்லையில், தமிழகப் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

dinamalar