பேவிபிராவிர் மாத்திரைகள்
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பேவிபிராவிர் மாத்திரைகள் நல்ல பலனைத் தருவது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
மும்பை: கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிற நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிற மருந்துகள் சோதனை ரீதியாக பயன்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் ஜப்பானில் இன்புளூவென்சாவுக்கு வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரைகள் தரப்படுகின்றன. அந்த மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கும் சோதனை முறையில் டாக்டர்கள் தருகின்றனர்.
இந்த மாத்திரைகள் எந்தளவுக்கு பலன் அளிக்கின்றன என்பது தொடர்பாக இந்தியாவில் 7 முக்கிய இடங்களில் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையை, அவற்றை தயாரித்து சந்தையிடுகிற மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற கிளென்மார்க் நிறுவனத்தார் நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்த மாத்திரைகள் லேசான பாதிப்பு முதல் மிதமான பாதிப்பு வரை உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிப்பதாக தெரிய வந்திருக்கிறது என அந்த நிறுவனத்தார் கூறுகின்றனர்.
150 நோயாளிகளுக்கு தந்து இந்த மாத்திரைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ பரிசோதனையின்போது, வழக்கமான ஆதரவு பராமரிப்புடன் 14 நாட்கள் வரையில் பேவிபிராவிர் மாத்திரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்றாம் கட்ட சோதனையில் முதன்மை செயல்திறன் முடிவு, மேம்பாடுகளை காட்டி இருக்கிறது.
மேலும் இந்த மாத்திரைகள் எந்தவொரு மோசமான பாதகமான விளைவுகளையோ, மரணத்தையோ ஏற்படுத்தவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
பொதுவாக நிகழ்ந்துள்ள பாதிப்பு, 12 நோயாளிகளுக்கு யூரிக் அமிலம் அதிகரித்து இருக்கிறது. இரைப்பை குடல் தொந்தரவும் லேசான அளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆய்வினை நடத்திய குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் ஜாரிர் உட்வாடியா கருத்து தெரிவிக்கையில், “இந்திய பேவிபிராவிர் மாத்திரைகள் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. தொற்று நோயின் பரவலை கருத்தில் கொண்டு, அவசர உணர்வோடு இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அறிவியல் கொள்கைகளில் சமரசம் செய்யப்படவில்லை. ஆரம்ப முடிவுகளை சுதந்திரமாக காண ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவை ஊக்கம் அளிக்கின்றன. இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்கள் விரைவான நிவாரணம் பெற்றனர். வைரஸ்கள் வேகமாக ஒழித்துக்கட்டப்பட்டன. இதன் இறுதிக்கட்ட முடிவுக்காகவும், உலகளவில் நடக்கிற ஆய்வு முடிவுக்காகவும் காத்திருக்கிறேன். அதுவரையில், கொரோனா நோயாளிகளுக்கு பேவிபிராவிரை பயன்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கருதுகிறேன்” என குறிப்பிட்டார்.
கிளென்மார்க் நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் மோனிகா தாண்டன் கூறுகையில், “பேவிபிராவிர் மாத்திரைகள் பற்றிய மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் ஊக்கம் அளிக்கின்றன. இவை, லேசானது முதல் மிதமானதுவரையில் பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆரம்ப காலத்தில் இந்த மருந்து தருகிறபோது, நோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை தரலாம் என காட்டுகின்றன. நோயாளிகளின் இறப்பையும் தடுக்கலாம்” என தெரிவித்தார்.
malaimalar