பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு

பெங்களூரு மெட்ரோ ரெயில்

கொரோனாவால் கடந்த 4 மாதங்களாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால், பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக, நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார்.

பெங்களூரு : கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வரை 21 நாட்கள் நாடு முழுவதும் முதல்கட்ட ஊரடங்கை அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி கர்நாடக அரசும் மாநிலத்தில் முழு ஊரடங்கை அறிவித்து இருந்தது.

இதனால் ரெயில், பஸ், மெட்ரோ ரெயில், விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. முன்னதாக பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 22-ந் தேதி முதலே மெட்ரோ ரெயில்களை இயக்க அரசு தடை விதித்து இருந்தது. இதனால் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் இயங்கவில்லை.

அதன்பின்னர் மத்திய அரசு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கை அறிவித்தது. இந்த நிலையில் 5-வது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டன. அதில் பஸ், ரெயில், உள்நாட்டு விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால், பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு சுமார் ரூ.100 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் அஜித் சேத் நிருபர்களிடம் கூறுகையில், பையப்பனஹள்ளி முதல் மைசூரு ரோடு வரையும், நாகசந்திரா முதல் எலச்சனஹள்ளி வரையும் இருமார்க்கமாக மெட்ரோ ரெயில்களை இயக்கி வந்தோம். மெட்ரோ ரெயில்களில் ஒரு நாளைக்கு 4½ லட்சம் பேர் வரை பயணம் செய்தார்கள். இதன்மூலம் எங்களுக்கு தினசரி ரூ.1½ கோடி வருமானம் கிடைத்தது. மாதத்திற்கு ரூ.25 கோடி வரை வருமானம் கிடைத்து வந்தது. இதில் ஊழியர்களுக்கு சம்பளம், ரெயில்களின் பராமரிப்பு செலவு என மாதம் ரூ.80 லட்சம் செலவாகி வந்தது.

ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மார்ச் மாதத்தில் இருந்து 4 மாதங்களுக்கு மேலாக மெட்ரோ ரெயில் சேவை பாதித்து உள்ளது. இதன்மூலம் சுமார் ரூ.100 கோடி வரை எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.

கர்நாடக அரசு சமீபத்தில் பி.எம்.டி.சி., கே.எஸ்.ஆர்.டி.சி. உள்பட 4 மண்டலங்களில் வேலை செய்து வரும் போக்குவரத்து ஊழியர்கள் 1 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு ரூ.961 கோடி உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. ஆனால் மெட்ரோ ரெயில் நிறுவன ஊழியர்களுக்கு உதவித்தொகை எதுவும் அரசு சார்பில் அறிவிக்கப்படவில்லை.

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட 3-வது கட்ட வழிகாட்டுதல் அறிக்கையில் கூட மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மெட்ரோ ரெயில்களில் பொருத்தப்பட்டு இருக்கும் குளிர்சாதன எந்திரம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது என்ற காரணத்திற்காக மெட்ரோ ரெயில் சேவைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 4-வது கட்ட வழிகாட்டுதல் அறிக்கையில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

malaimalar