156 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் கொரோனா பலி 50 ஆயிரத்தை நெருங்குகிறது: தொற்று மீட்பு 72 சதவீதத்தை எட்டுகிறது

இந்தியாவில் 156 நாட்களுக்கு பின்னர் கொரோனா பலி 50 ஆயிரத்தை நெருங்குகிறது. தொற்றில் இருந்து மீண்டோரின் அளவு 72 சதவீதத்தை எட்டுகிறது.

புதுடெல்லி, உலக நாடுகளையெல்லாம் கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டு வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பல நாடுகள் பெரும் உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றின் மோசமான பாதிப்பை சந்தித்து வருவதில் 3-வது நாடாக இந்தியா இருந்தபோதும், இறப்பு விகிதம் என்பது பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நல்ல நிலையில் உள்ளது.

அமெரிக்காவில் 23 நாளில் 50 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் பலியாகினர். பிரேசில் நாட்டில் 50 ஆயிரம் உயிர்ப்பலி என்பது 95 நாளில் பதிவானது. மெக்சிகோ நாட்டில் இந்த எண்ணிக்கை பதிவாக 141 நாள் ஆனது.

ஆனால் நமது நாட்டில் 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தொட 156 நாட்கள் ஆகி உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. இதுவே இந்தியாவில் இறப்புவீதம், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நல்ல நிலையில் உள்ளது என்பதற்கு சான்றாக அமைகிறது.

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் கொரோனாவுக்கு 944 பேர் பலியானதால், மொத்த இறப்பு எண்ணிக்கை 49 ஆயிரத்து 980 ஆகி உள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டும். தொடர்ந்து இந்தியாவில் இறப்புவிகிதம் குறைந்தபடியே உள்ளது. நேற்றைய நிலவரப்படி பலி விகிதம் மேலும் சரிவை சந்தித்து 1.93 சதவீதமாகி உள்ளது.

அதே போன்று இந்தியாவில் கொரோனா வைரசை வீழ்த்தி, அதில் இருந்து மீண்டு வீடுகளுக்கு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.

நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்து 322 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டனர். இதுவரை நாட்டில் 18 லட்சத்து 62 ஆயிரத்து 258 பேர் கொரோனாவை தோற்கடித்து இருக்கிறார்கள்.

இதனால் இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 72 சதவீதத்தை நெருங்கி உள்ளது.

தற்போது நாட்டில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 444 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையை பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெறுகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பரிசோதனையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் 10 லட்சம் மாதிரிகளை பரிசோதிக்க இலக்கு வைத்துள்ள நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 லட்சத்து 46 ஆயிரத்து 608 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதனால் இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2.93 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரவு கூறுகிறது.

தற்போது நாட்டில் அரசு துறை சார்பில் 969, தனியார் துறை தரப்பில் 500 என மொத்தம் 1,469 பரிசோதனைக்கூடங்கள் இயங்கி வருவது கவனத்தை கவர்வதாக அமைந்துள்ளது.

dailythanthi